167 நாட்கள் சட்டசபை கூட்டத்தில் 200 மசோதாக்கள் நிறைவேற்றம்; சபாநாயகர் காகேரி பேட்டி
எனது பதவி காலத்தில் 167 நாட்கள் சட்டசபை கூட்டம் நடத்தப்பட்டு 200 சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டதாக சட்டசபை சபாநாயகர் காகேரி கூறினார்.
பெங்களூரு:
எனது பதவி காலத்தில் 167 நாட்கள் சட்டசபை கூட்டம் நடத்தப்பட்டு 200 சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டதாக சட்டசபை சபாநாயகர் காகேரி கூறினார்.
கர்நாடக சட்டசபை சபாநாயகர் காகேரி பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
அனுமதி அளித்தேன்
கர்நாடக சட்டசபை சபாநாயகராக நான் 3 ஆண்டுகள் 10 மாதங்கள் பணியாற்றி இருக்கிறேன். இந்த 15-வது சட்டசபையில் 15 கூட்டத்தொடர்கள் நடைபெற்று உள்ளன. எனது காலத்தில் 167 நாட்கள் சட்டசபை கூட்டம் நடந்துள்ளது. இவற்றில் 200 சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அனைவருக்கும் பேச வாய்ப்பு வழங்கினேன்.
உறுப்பினர்கள் எழுப்பிய அனைத்து கேள்விகளுக்கு அரசிடம் இருந்து பதில் பெற்று கொடுத்தேன். வழக்கமான அலுவல்கள் தவிர அரசியல் சாசனம் குறித்து விவாதிக்கப்பட்டது. ஒரே நாடு-ஒரே தேர்தல் பற்றிய விவாதம் தொடங்கப்பட்டது. பல்வேறு காரணங்களால் அந்த விவாதம் முழுமையாக நிறைவடையவில்லை.
தகுதி நீக்கம்
மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா சட்டசபைக்கு வந்து இரு சபைகளின் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றினார். ஆண்டுதோறும் சிறந்த உறுப்பினரை தேர்ந்தெடுத்து விருது வழங்கும் நடைமுறையை தொடங்கினேன். முதலில் எடியூரப்பாவுக்கும், கடந்த 2022-ம் ஆண்டு மூத்த உறுப்பினர் ஆர்.வி.தேஷ்பாண்டேவுக்கும் அந்த விருது வழங்கப்பட்டது.
எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் குறித்த விதிமுறைகளை வகுக்கும் குழு அமைக்கப்பட்டது. அதில் நானும் இடம் பெற்று இருந்தேன். இதன் அறிக்கையை நாடாளுமன்ற மக்களவை சபாநாயகரிடம் தாக்கல் செய்துள்ளோம். அதே போல் சிறப்பாக செயல்படும் சட்டசபை, மேல்-சபைகளை தேர்ந்தெடுத்து விருது வழங்குவதற்கான விதிமுறைகளை வகுக்க எனது தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அதன் அறிக்கையையும் வழங்கியுள்ளேன்.
சட்டசபை பத்திரிகை
சட்டசபை கூட்டத்தொடர் குறித்த செய்திகளை மக்களுக்கு தெரிவிக்கும் பொருட்டு சட்டசபை பத்திரிகையை தொடங்கினேன். இது மூன்று மாதங்களுக்கு ஒரு முறை வெளியாகிறது. சட்டசபை அலுவலகத்தில் பணியாற்ற 77 பேரை நியமனம் செய்துள்ளோம். அவர்களுக்கு விரைவில் பணி நியமன ஆணைகள் வழங்கப்படும். தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் நடைபெற்ற சபாநாயகர்கள் மாநாட்டில் நான் கலந்து கொண்டேன்.
எனது பதவி காலத்தில் சட்டசபை கூட்ட நிகழ்வுகளை 1.10 லட்சம் பேர் நேரில் பார்வையிட்டுள்ளனர். கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் பெலகாவியில் நடைபெற்ற கூட்டத்தொடரை 19 ஆயிரம் பேர் நேரில் பார்த்தனர்.
2 எம்.எல்.ஏ.க்கள்
லிம்பண்ணா, லிங்கேஷ் ஆகிய 2 எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே சட்டசபை கூட்டம் நடைபெற்ற 167 நாட்களிலும் ஆஜராகி இருக்கிறார்கள். காகிதம் இல்லா கூட்டத்தொடர் அதாவது 'இ-விதான்' திட்டத்தை செயல்படுத்த நான் தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டேன். ஆனால் அது முடியவில்லை. நான் மீண்டும் பா.ஜனதாவுக்கு திரும்பி தேர்தலில் போட்டியிட உள்ளேன்.
இவ்வாறு காகேரி கூறினார்.