பிரசாந்த் சம்பரகியை வெளியேற்ற கோரி கன்னட அமைப்பினர் போராட்டம்
பிக்பாஸ் வீட்டில் இருந்து பிரசாந்த் சம்பர்கியை வெளியேற்ற வேண்டும் என்று கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.
ராமநகர்-
கன்னட திரைப்பட தயாரிப்பாளராக பணியாற்றி வருபவர் பிரசாந்த் சம்பரகி. இவர் சமூக ஆர்வலரும் ஆவார். இந்த நிலையில் கன்னட பிக்பாஸ் 8-வது சீசனில் பிரசாந்த் சம்பரகி பங்கேற்று உள்ளார். தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சின் படப்பிடிப்பு ராமநகரில் மாவட்டம் பிடதியில் உள்ள பிலிம் சிட்டியில் நடந்து வருகிறது. இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கன்னட அமைப்பை சேர்ந்த ரூபேஷ் ராஜண்ணாவும் பங்கேற்று உள்ளார். இந்த நிலையில் பிரசாந்த் சம்பரகி, ரூபேஷ் ராஜண்ணாவை பற்றி அவதூறாக பேசியதுடன், கன்னட அமைப்புகள் பற்றியும் அவதூறாக பேசியதாகவும் தெரிகிறது. இதனால் பிக்பாஸ் வீட்டில் இருந்து பிரசாந்த் சம்பரகியை உடனடியாக வெளியேற்ற வேண்டும் என்று கூறி பிலிம் சிட்டி முன்பு நேற்று கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்தினர். பிரசாந்த் சம்பரகியை நாடு கடத்த வேண்டும் என்று கோஷம் எழுப்பிய கன்னட அமைப்பினர், பிக்பாஸ் நிகழ்ச்சியை ரத்து செய்ய வேண்டும் என்றும் கூறினர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர்.