மைசூருவில் கன்னட ராஜ்யோத்சவா விழா கொண்டாட்டம்
மைசூருவில் கன்னட ராஜ்யோத்சவா விழா கொண்டாட்டத்தில் கிடைத்த வருவாய் குறித்து நிருபர்களுக்கு மந்திரி எஸ்.டி.சோமசேகர் பேட்டியளித்தார்.
மைசூரு-
கர்நாடகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் நேற்று கன்னட ராஜ்யோத்சவா விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. மைசூரு மாவட்ட நிர்வாகம் சார்பில் அரண்மனை முன்பு உள்ள கோட்டை ஆஞ்சநேயர் கோவில் வளாகத்தில் வைத்து கன்னட ராஜ்யோத்சவா விழா கொண்டாடப்பட்டது. மந்திரி எஸ்.டி.சோமசேகர் அரண்மனை வளாகத்தில் இருக்கும் கன்னட தாய் புவனேஸ்வரி கோவிலுக்கு சென்று விசேஷ பூஜை செலுத்தினார். பின்னர் கன்னட கொடியை ஏற்றினார். இதையடுத்து தேசிய கீதம், கன்னடத்தாய் வாழ்த்து பாடப்பட்டது. பின்னர் போலீஸ் அணிவகுப்பு மரியாதையை மந்திரி எஸ்.டி.சோமசேகர் ஏற்றார். இதன்பிறகு பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு ராஜ்யோத்சவா விருது வழங்கப்பட்டது. பின்னர் மந்திரி எஸ்.டி.சோமசேகர் சிறப்புரையாற்றினார்.
இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் ராஜேந்திரா, எம்.எல்.ஏ.க்களான ராமதாஸ், நாகேந்திரா, தன்வீர்சேட், பிரதாப் சிம்ஹா எம்.பி., மேயர் சிவக்குமார், போலீஸ் கமிஷனர் சந்திரகுப்தா, மைசூரு மாநகராட்சி கமிஷனர் லட்சுமிகாந்த் ரெட்டி உள்பட பலர் கலந்துகொண்டனர்.