டிராக்டர் கவிழ்ந்து விபத்து: உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு யோகி ஆதித்யநாத் நேரில் ஆறுதல்
குளத்தில் டிராக்டர் கவிழ்ந்து 26 பேர் பலியான சம்பவத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு யோகி ஆதித்யநாத் நேரில் ஆறுதல் கூறினார்.
கான்பூர்,
உத்தரபிரதேசத்தின் கான்பூர் மாவட்டத்துக்கு உட்பட்ட சாத் பகுதியில் நேற்று முன்தினம் பக்தர்களை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்த டிராக்டர் டிராலி ஒன்று குளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பெண்கள், குழந்தைகள் உள்பட 26 பேர் உயிரிழந்தனர். 10-க்கும் மேற்பட்டோர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த கோர விபத்தில் உயிரிழந்தோருக்கு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் ஆகியோர் இரங்கல் தெரிவித்தனர். மேலும் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் இழப்பீடும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த விபத்தை தொடர்ந்து தனது பால்ராம்பூர் பயணத்தை ரத்து செய்த முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், காயமடைந்து சிகிச்சை பெற்று வருவோரை நேற்று ஆஸ்பத்திரிகளில் சென்று சந்தித்தார். அவர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்குமாறு டாக்டர்களை கேட்டுக்கொண்டார்.
மேலும் உயிரிழந்தோரின் கிராமமான கோர்த்தாவுக்கு நேரில் சென்ற அவர், பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதலும் தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதுபோன்ற விபத்துகளை தவிர்க்க அதிகாரிகளுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியிருப்பதாக கூறினார்.