மாற்றுத்திறனாளிகள், 80 வயது முதியோர் வீட்டில் இருந்து ஓட்டுப்போடுவது எப்படி?
கர்நாடக சட்டசபை தேர்தலில் முதல் முறையாக மாற்றுத்திறனாளிகள் மற்றும் 80 வயதான முதியோருக்கு வீட்டில் இருந்தே ஓட்டு போடும் வசதி அறிமுகப்பட்டுப்பட்டு உள்ளது. அது எப்படி? என்பது பற்றி தேர்தல் ஆணையம் தகவல்களை தெரிவித்துள்ளது.
பெங்களூரு:
கர்நாடக சட்டசபை தேர்தலில் முதல் முறையாக மாற்றுத்திறனாளிகள் மற்றும் 80 வயதான முதியோருக்கு வீட்டில் இருந்தே ஓட்டு போடும் வசதி அறிமுகப்பட்டுப்பட்டு உள்ளது. அது எப்படி? என்பது பற்றி தேர்தல் ஆணையம் தகவல்களை தெரிவித்துள்ளது.
வீட்டில் இருந்தே ஓட்டு
கர்நாடக சட்டசபைக்கு அடுத்த மாதம் (மே) 10-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் 80 வயது முதியோர், மாற்றுத்திறனாளிகள் வீட்டில் இருந்தே ஓட்டுப்போடலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதன்மூலம் 80 வயதுக்கு மேற்பட்ட 12 லட்சத்து 15 ஆயிரத்து 142 வாக்காளர்களும், மாற்றுத்திறனாளிகள் 5 லட்சத்து 60 ஆயிரத்து 908 பேரும் வீட்டில் இருந்தே ஓட்டு போடலாம்.
12 டி படிவத்தை பூர்த்தி செய்து...
மாற்றுத்திறனாளிகள், 80 வயது முதியோரின் வீட்டுக்கு நேரடியாக பூத் மட்டத்திலான தேர்தல் அதிகாரிகள் செல்வார்கள். அந்த அதிகாரிகள் 12-டி படிவத்தை கொடுப்பார்கள். அந்த படிவத்தில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் வயதானவர்கள், அதில் கேட்கப்பட்டு இருக்கும் தகவல்களை தெரிவிக்க வேண்டும். அதன்பிறகு, வேட்பு மனு தாக்கல் தொடங்கிய ஒரு வாரத்திற்குள் அதிகாரிகளிடம் 12-டி படிவத்தை ஒப்படைக்க வேண்டும்.
அதன்பிறகு, ஓட்டுப்பதிவு நடைபெறும் மே மாதம் 10-ந் தேதிக்கு முன்பாகவே, அதாவது 9-ந் தேதியே தேர்தல் அதிகாரிகள் மாற்றுத்திறனாளிகள், 80 வயதுக்கு மேற்பட்டோரின் வீட்டுக்கே வந்து ஓட்டுப்போடுவதற்கான நடவடிக்கைகளை எடுப்பார்கள். அவர்கள் ஓட்டுப்போடுவது வீடியோவில் பதிவு செய்யப்படும். தேர்தல் அதிகாரிகள் வீட்டுக்கு வருவது பற்றி சம்பந்தப்பட்டவர்களுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்படும்.
2 முறை அவகாசம்
அதிகாரிகள் வரும் போது மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் இல்லை என்றால், அவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்படும். அதாவது மறுநாள் (மே 10-ந்தேதி) மீண்டும் அதிகாரிகள் வீட்டுக்கு வருவார்கள். அப்போதும் அவர்கள் வீட்டில் இல்லை என்றால் ஓட்டுப்போட முடியாது.
தவிர்க்க முடியாத காரணங்களால் வெளியே சென்றிருந்தாலும், அவர்கள் தங்களது ஓட்டு உரிமையை செலுத்த வேண்டும் என்பதற்காக தான் 2 முறை மாற்றுத்திறனாளிகளுக்கும், முதியவர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்படுகிறது.
அரசியல் கட்சிகளுக்கு பட்டியல்
மாற்றுத்திறனாளிகள் மற்றும் 80 வயதுக்கு மேற்பட்டோர் சம்பந்தப்பட்ட பட்டியல் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அனுப்பி வைக்கப்படும். இதனால் எந்த விதமான முறைகேடுகளும் நடைபெறாது என்று தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் 40 சதவீத அளவுக்கு மாற்றுத்திறனாளிகளாக இருப்பவர்களுக்கு மட்டும் வீட்டில் இருந்தே ஓட்டுப்போட அனுமதி வழங்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.
இதற்கிடையே 40 சதவீதத்திற்கு கீழ் பாதிக்கப்பட்டவர்களும் தங்களுக்கு வீட்டில் இருந்து ஓட்டுப்போட வாய்ப்பளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தி வருகின்றனர்.