எம்.எல்.ஏ.க்கள் கருத்து குறித்து மேலிடத்திடம் அறிக்கை தாக்கல்; சுஷில்குமார் ஷிண்டே பேட்டி
முதல்-மந்திரி யார் என்பது தொடர்பான எம்.எல்.ஏ.க்கள் கருத்து குறித்து மேலிடத்திடம் அறிக்கை தாக்கல் செய்வோம் என்று சுஷில்குமார் ஷிண்டே தெரிவித்தார்.
பெங்களூரு:
முதல்-மந்திரி யார் என்பது தொடர்பான எம்.எல்.ஏ.க்கள் கருத்து குறித்து மேலிடத்திடம் அறிக்கை தாக்கல் செய்வோம் என்று சுஷில்குமார் ஷிண்டே தெரிவித்தார்.
எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்
கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றுள்ளது. முதல்-மந்திரி பதவிக்கு சித்தராமையா, டி.கே.சிவக்குமார் இடையே கடும் போட்டி எழுந்துள்ளது. கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நேற்று முன்தினம் பெங்களூருவில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது. இதில் மேலிட பாா்வையாளர்கள் சுஷில்குமார் ஷிண்டே, ஜிதேந்திர சிங், தீபக் பபாரியா ஆகியோர் முன்னிலையில் இந்த கூட்டம் நடைபெற்றது.
இதில் முதல்-மந்திரி யார் என்பதை தேர்ந்தெடுக்கும் அதிகாரம் காங்கிரஸ் மேலிடத்திற்கு வழங்கி ஒரு வரியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் பிறகு அகில இந்திய காங்கிரஸ் தலைவர் கார்கே உத்தரவின்படி எம்.எல்.ஏ.க்களின் கருத்தும் தனித்தனியாக கேட்கப்பட்டது. இதில் எம்.எல்.ஏ.க்கள் தங்களின் கருத்துகளை தெரிவித்தனர்.
இந்த நிலையில் மேலிட பார்வையாளர்கள் நேற்று காலை டெல்லி புறப்பட்டு சென்றனர். அதற்கு முன்னதாக சுஷில்குமார் ஷிண்டே நிருபர்களிடம் கூறியதாவது:-
டெல்லிக்கு அழைப்போம்
காங்கிரசின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் முதல்-மந்திரி யார் என்பது குறித்து ஆலோசித்தோம். எம்.எல்.ஏ.க்கள் ஒவ்வொருவரின் கருத்தையும் கேட்டு அறிந்தோம். இந்த பணியை முடித்து நாங்கள் தற்போது டெல்லி செல்கிறோம். எம்.எல்.ஏ.க்களின் கருத்துகளை ஒருங்கிணைத்து அறிக்கை தயாரித்துள்ளோம்.
அது ரகசியமானது. அதை உங்களிடம் வெளிப்படுத்த முடியாது. இந்த அறிக்கையை கட்சி மேலிடத்திடம் தாக்கல் செய்வோம். தேவைப்பட்டால் டி.கே.சிவக்குமார், சித்தராமையா ஆகியோரை டெல்லிக்கு வரும்படி அழைப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.