இரவு நேரத்தில் பணியாற்ற பெண்களுக்கு அனுமதி அளிக்கும் சட்டத்திருத்த மசோதா; கர்நாடக சட்டசபையில் தாக்கல்
கர்நாடகத்தில் தொழில் நிறுவனங்களில் இரவு நேரத்தில் பணியாற்ற பெண்களுக்கு அனுமதி அளிக்கும் சட்டத்திருத்த மசோதாவை சட்டசபையில் நேற்று மந்திரி மாதுசாமி தாக்கல் செய்தார்.
பெங்களூரு:
கர்நாடகத்தில் தொழில் நிறுவனங்களில் இரவு நேரத்தில் பணியாற்ற பெண்களுக்கு அனுமதி அளிக்கும் சட்டத்திருத்த மசோதாவை சட்டசபையில் நேற்று மந்திரி மாதுசாமி தாக்கல் செய்தார்.
2 மடங்கு சம்பளம்
கர்நாடக சட்டசபையில் நேற்று கேள்வி நேரத்தில் தொழிலாளர் நலத்துறை மந்திரி சிவராம் ஹெப்பார் சார்பில் சட்டத்துறை மந்திரி மாதுசாமி, கர்நாடக தொழிற்சாலைகள் சட்டத்திருத்த மசோதாவை தாக்கல் செய்தார். அதில் கூறி இருப்பதாவது:-
கர்நாடகத்தில் உள்ள தொழில் நிறுவனங்களில் தொழிலாளர்கள் வாரத்தில் 48 மணி நேரம் வரை பணியாற்ற வேண்டும். அதற்கு மேல் பணியாற்றுமாறு தொழிலாளர்களை வற்புறுத்தக்கூடாது. வாரத்தில் கூடுதலாக 9 மணி நேரம் பணியாற்ற அனுமதி அளிக்கப்பட்டது. அதை 12 மணி நேரமாக அதிகரிக்க இந்த மசோதாவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த கூடுதல் நேர பணிக்கு 2 மடங்கு சம்பளம் வழங்க வேண்டும்.
அனுமதி அளிக்கலாம்
அதிக நேரம் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு அதற்கு ஏற்றார் போல் ஓய்வு வழங்க வேண்டும். தொழில் நிறுவனங்களில் இரவு நேரத்தில் பணியாற்ற ஆர்வமுள்ள பெண்களுக்கு அனுமதி அளிக்கலாம். ஆனால் அவர்களுக்கு உரிய பாதுகாப்பு மற்றும் சுகாதார வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். மேலும் அந்த பெண் ஊழியர்களிடம் இருந்து எழுத்து மூலமாக கடிதம் பெற்றுக்கொள்ள வேண்டும்.
இரவு நேரத்தில் பெண்கள் கட்டாயம் பணியாற்ற வேண்டும் என்று விதிமுறையை உருவாக்காமல், விருப்பம் உள்ளவர்களை மட்டும் இரவு நேர பணிக்கு பயன்படுத்தி கொள்ள வேண்டும். தொழிலாளர்களின் வார விடுமுறையில் எந்த மாற்றமும் செய்யக்கூடாது. பெண் ஊழியர்களின் செல்போன் எண், இணைய முகவரி போன்ற தகவல்களை பகிரங்கப்படுத்தக்கூடாது. பெண் ஊழியர்களை வாகனங்களில் அழைத்து வரும் டிரைவரின் முழு விவரங்களை வைத்துக்கொள்ள வேண்டும். அவர்களின் கடந்த கால விஷயங்களையும் கேட்டு அறிய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.