கர்நாடகா பா.ஜ.க. மந்திரிக்கு ரூ.1,609 கோடி சொத்து என அறிவிப்பு; காங்கிரசின் டி.கே. சிவகுமாருக்கு ரூ.1,214 கோடி


கர்நாடகா பா.ஜ.க. மந்திரிக்கு ரூ.1,609 கோடி சொத்து என அறிவிப்பு; காங்கிரசின் டி.கே. சிவகுமாருக்கு ரூ.1,214 கோடி
x

கர்நாடகாவில் பணக்கார அரசியல்வாதிகளில் ஒருவரான பா.ஜ.க. மந்திரிக்கு ரூ.1,609 கோடியும், காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவகுமாருக்கு ரூ.1,214 கோடியும் சொத்து உள்ளது.

பெங்களூரு,

கர்நாடக சட்டசபை தேர்தல் வருகிற மே 10-ந்தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் தேர்தலை முன்னிட்டு அந்தந்த கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர்.

இதில், பணக்கார அரசியல்வாதிகளில் ஒருவரான ஆளும் பா.ஜ.க.வை சேர்ந்த மந்திரி எம்.டி.பி. நாகராஜூ (வயது 72) தனக்கு ரூ.1,609 கோடி மதிப்புக்கு சொத்து உள்ளது என வேட்பு மனுவில் தெரிவித்து உள்ளார்.

9-ம் வகுப்பு வரை படித்து உள்ள அவர் பெங்களூரு புறநகர் பகுதிக்கு உட்பட்ட ஹோஸ்கோட் சட்டசபை தொகுதியில் இருந்து போட்டியிட விருப்பம் தெரிவித்து உள்ளார்.

அவர் தனது வேலை அல்லது தொழில் என்ற இடத்தில் விவசாயி மற்றும் வர்த்தகம் என குறிப்பிட்டு, அதனுடன் இல்லத்தரசியாக தனது மனைவி எம். சாந்தகுமாரி என குறிப்பிட்டு, இருவருக்கும் சேர்த்து அசையும் சொத்துகள் ரூ.536 கோடி அளவில் உள்ளன என தெரிவித்து உள்ளார்.

இந்த தம்பதியின் அசையா சொத்துகளின் மதிப்பு ரூ.1,073 கோடி என அவர் தாக்கல் செய்த வேட்பு மனுவில் குறிப்பிட்டு உள்ளார். அவர் எம்.எல்.சி.யாக பதவி வகித்து வருகிறார். கடந்த 2020-ம் ஆண்டு எம்.எல்.சி. பதவிக்கு போட்டியிட்டபோது, தனது மனைவியுடன் சேர்த்து தனக்கு ரூ.1,220 கோடி சொத்து உள்ளது என குறிப்பிட்டார்.

அவர் தனக்கு, விவசாயம், வீடு, வர்த்தகம் மற்றும் பிற வழிகளில் வருவாய் வருகிறது என விவரித்து உள்ளார். அவரது மனைவிக்கும், வீடு வழியேயான சொத்து மற்றும் பிற வழிகளில் வருவாய் வருகிறது என தெரிவித்து உள்ளார்.

இதேபோன்று, கர்நாடக பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் டி.கே. சிவகுமார் தனக்கு அசையும் மற்றும் அசையா சொத்துகள் என மொத்தம் ரூ.1,214 கோடி மதிப்புக்கு சொத்துகள் உள்ளன என குறிப்பிட்டு உள்ளார். கனகபுரா தொகுதியில் இருந்து அவர் போட்டியிட விருப்பம் தெரிவித்து வேட்பு மனு தாக்கல் செய்து உள்ளார்.


Next Story