கர்நாடக பட்ஜெட் இன்று தாக்கல்


கர்நாடக பட்ஜெட் இன்று தாக்கல்
x

கர்நாடக சட்டசபையில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை இன்று (வெள்ளிக்கிழமை) 2023-24-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். சட்டசபை தேர்தலையொட்டி இதில் கவர்ச்சிகரமான அறிவிப்புகள் வெளியாக இருக்கிறது.

பெங்களூரு:

நெருங்கும் சட்டசபை தேர்தல்

கர்நாடக சட்டசபை தேர்தல் வருகிற மே மாதம் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கு இன்னும் 2½ மாதங்கள் மட்டுமே உள்ளன. இதனால் அரசியல் கட்சிகள் தேர்தலை எதிர்கொள்ள பொதுக்கூட்டங்கள், யாத்திரைகளை நடத்தி வருகின்றன. இதில் பா.ஜனதா சார்பில் பிரதமர் மோடி, மத்திய மந்திரி அமித்ஷா, தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோர் அடிக்கடி கர்நாடகம் வந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்கள்.

அதுபோல் காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளர்கள், நிர்வாகிகள் இங்கு வந்து மாநாடு, பொதுக்கூட்டங்களில் பங்கேற்று வருகிறார்கள். இரு தேசிய கட்சிகளை விட ஜனதாதளம் (எஸ்) கட்சி 93 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்து, தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பே தீவிர பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறது.

கூட்டுக்கூட்டத்தில் கவர்னர் உரை

இத்தகைய பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் பசவராஜ்பொம்மை தலைமையிலான பா.ஜனதா ஆட்சியின் சட்டசபை கூட்டு கூட்டமும், பட்ஜெட் கூட்டதொடரும் கடந்த 10-ந்தேதி பெங்களூரு விதான சவுதாவில் தொடங்கியது. முதல்நாள் கூட்டத்தில் இரு அவையிலும் கவர்னர் தாவர்சந்த் கெலாட் உரையாற்றினார்.

தேர்தல் பணிகளில் 3 கட்சிகளின் தலைவர்கள், எம்.எல்.ஏ.க்கள், மந்திரிகள் ஈடுபட்டு வருவதால், சட்டசபை கூட்டத்தில் பெரும்பாலான உறுப்பினர்கள் வரவில்லை. இந்த ஆட்சியின் இறுதி சட்டசபை கூட்டத்தொடர் எந்த பரபரப்பும் இல்லாமல் நடைபெற்று வருகிறது.

இன்று பட்ஜெட் தாக்கல்

இந்த சூழ்நிலையில் ஏற்கனவே அறிவித்தப்படி 2023-24-ம் ஆண்டுக்கான கர்நாடக பட்ஜெட் (வரவு-செலவு திட்டம்) கர்நாடக சட்டசபையில் இன்று (வெள்ளிக்கிழமை) தாக்கல் செய்யப்படுகிறது. நிதித்துறையை தன்வசம் வைத்துள்ள முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை காலை 11 மணிக்கு விதான சவுதாவில் பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார்.

சட்டசபை தேர்தல் நேரத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதால், இதில் வாக்காளர்களை கவரும் வகையில் கவர்ச்சிகரமான திட்டங்கள் அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளது. மக்களுக்கு சுமையை ஏற்படுத்தும் புதிய வரிகளோ அல்லது வரி உயர்வோ இருக்காது. அனைத்து தரப்பு மக்களுக்கும் உரிய அளவில் நிதி ஒதுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தனது 2-வது பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.

புதிய பட்ஜெட்

இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் திட்டங்கள் அமலுக்கு வர வேண்டுமெனில், சட்டசபை தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும். அவ்வாறு பா.ஜனதா ஆட்சி வந்தால் தான், இந்த பட்ஜெட் அறிவிப்புகள் செயல்படுத்தப்படும். ஒருவேளை காங்கிரஸ் ஆட்சியோ அல்லது காங்கிரஸ்-ஜனதா தளம் (எஸ்) கூட்டணி ஆட்சியோ அமைந்தால் புதிய பட்ஜெட்டை தாக்கல் செய்வார்கள். அதனால் இன்று தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் அமலுக்கு வருவது தேர்தலில் பா.ஜனதாவின் வெற்றியை பொறுத்தது ஆகும்.

பட்ஜெட் தாக்கலுக்கு முன்பு மந்திரிசபை கூட்டம் நடக்கிறது. அதில் பட்ஜெட்டுக்கு ஒப்புதல் வழங்கப்படும். இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பிறகு சனி, ஞாயிறு 2 நாட்கள் சட்டசபைக்கு விடுமுறை ஆகும். அதன் பிறகு சட்டசபை மீண்டும் வருகிற 20-ந் தேதி கூடும். பட்ஜெட் மீது 4 நாட்கள் விவாதம் நடைபெறும். கடைசி நாள் அதாவது 24-ந் தேதி பட்ஜெட் மீதான விவாதத்திற்கு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பதிலளிக்கிறார். அதன் பின்னர் சட்டசபை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படும். இதுவே 15-வது சட்டசபையின் கடைசி கூட்டத்தொடர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story