கர்நாடக சித்ரகலா பரிஷத் தேசிய அளவில் வளர்ச்சி அடைய வேண்டும்
ஓவிய சந்தையை 2 நாட்கள் நடத்தலாம் என்றும், கர்நாடக சித்ரகலா பரிஷத் தேசிய அளவில் வளர்ச்சி அடைய வேண்டும் என்றும் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
பெங்களூரு:-
ஓவிய சந்தை
பெங்களூரு குமரகிருபா ரோட்டில் ஆண்டுதோறும் கர்நாடக சித்ரகலா பரிஷத் சார்பில் ஓவிய சந்தை நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, நேற்று சித்ரகலா பரிஷத்தில் 20-வது ஓவிய சந்தை தொடங்கியது. இந்த ஓவிய சந்தையை முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நேற்று தொடங்கி வைத்தார். ஓவிய சந்தையில் இடம் பெற்றிருந்த பல்வேறு விதமான ஓவியங்கள், கலைஞர்களின் படைப்புகளை அவர் பார்த்து ரசித்தார். இந்த நிகழ்ச்சியில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேசியதாவது:-
தேசிய அளவில் வளர்ச்சி
சித்ரகலா பரிஷத் சார்பில் ஆண்டுதோறும் ஓவிய சந்தை நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஓவிய சந்தையில் இடம் பெற்றுள்ள ஓவியங்களை பார்த்து ரசிக்க 2 கண்கள் போதாது. கர்நாடக சித்ரகலா பரிஷத் பெங்களூருவுக்கு மட்டுமே சேவை செய்வதாகவும், தேவையானதாகவும் இருந்து வருகிறது. நம்முடைய கர்நாடக சித்ரகலா பரிஷத் தேசிய அளவில் வளர்ச்சி அடைய வேண்டும்.
இதற்கு தேவையான உதவிகளை சித்ரகலா பரிஷத்திற்கு செய்து கொடுக்க அரசு தயாராக இருக்கிறது. பெங்களூருவை தவிர்த்து உப்பள்ளி, மங்களூரு, மைசூருவில் ஓவிய சந்தைகளை கர்நாடக சித்ரகலா பரிஷத் நடத்தலாம். அவ்வாறு மாநிலத்தின் பிற பகுதிகளில் ஓவிய சந்தையை நடத்துவதற்கு சித்ரகலா பரிஷத் தயாரானால், அதற்கு தேவையான உதவிகளை செய்து கொடுக்க அரசு தயாராக உள்ளது.
2 நாட்கள் நடத்தலாம்
சித்ரகலா பரிஷத் சார்பில் தற்போது ஒரு நாள் மட்டுமே ஓவிய சந்தை நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஓவிய சந்தையை 2 நாட்கள் நடத்தலாம். ஓவிய பிரியர்கள், இந்த ஓவிய சந்தையில் பங்கேற்று ஓவியங்களை வாங்கி பயன் அடைவார்கள். உலகத்திலேயே அதிக மதிப்பும், விலையும் உடையது ஓவியங்கள் மட்டுமே. அது வைரத்தை விட பெரியது என்று ஓவியர்களுக்கும், ஓவிய பிரியர்களுக்கும் மட்டுமே தெரியும். ஓவியத்தின் மதிப்பு எல்லாருக்கும் தெரிவதில்லை. சிறந்த படைப்பாளிகளின் ஓவியங்களை மக்களிடம் கொண்டு போய் சேர்க்கும் விதமாக இந்த ஓவிய சந்தை விளங்குகிறது. சாதாரண மக்களுக்கும் ஓவியங்கள் குறித்து விழிப்புணர்வும், ஓவியங்கள் பற்றி அறிந்து கொள்ளும் வாய்ப்பையும் இந்த ஓவிய சந்தை ஏற்படுத்தி கொடுக்கிறது.
இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.