கல்வீச்சு சம்பவம் நடந்த பைரேனஹள்ளி கிராமத்தில் இருந்து பிரசாரத்தை தொடங்கிய பரமேஸ்வர்
கல்வீச்சு சம்பவம் நடந்த பைரேனஹள்ளி கிராமத்தில் இருந்து பரமேஸ்வர் மீண்டும் பிரசாரத்தை தொடங்கினார்.
துமகூரு:
கர்நாடக முன்னாள் துணை முதல்-மந்திரியும், மூத்த தலைவருமான ஜி.பரமேஸ்வர் துமகூரு மாவட்டம் கொரட்டகெரே தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார். அவர் கடந்த மாதம் 19-ந்தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கொரட்டகெரே தாலுகா அலுவலகத்திற்கு சென்ற சமயத்தில் மர்மநபர் கல்வீசினார். இதில் அதிர்ஷ்டவசமாக அவர் தப்பினார். மர்மநபர் வீசிய கல், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் போலீசின் தலைைய பதம் பார்த்தது. இதுபற்றி வழக்குப்பதிவு செய்த கொரட்டகெரே போலீசார், கல்வீசி தாக்கியதாக கொரட்டகெரே அருகே ரெட்டிஹள்ளி வெங்கடபுராவை சேர்ந்த ரங்கதம்மய்யாவை கைது செய்தனர்.
இந்த நிலையில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வந்த பரமேஸ்வர் கடந்த 28-ந்தேதி தனது தொகுதிக்கு உட்பட்ட பைரேனஹள்ளி கிராமத்தில் தீவிர தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் மீது ஆதரவாளர்கள் பூக்கள் தூவி வரவேற்றனர். அந்த சமயத்தில் அவர் மீது மர்மநபர்கள் கல்வீசி தாக்கினர். இதில் அவரது மண்டை உடைந்தது. இதையடுத்து ேதர்தல் பிரசாரத்தை பாதியில் நிறுத்திய பரமேஸ்வர் சிகிச்சைக்காக துமகூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பெற்று வந்த பரமேஸ்வர் நேற்று முன்தினம் பிரசாரத்திற்கு செல்லவில்லை. ஒரு நாள் முழுவதும் ஓய்வெடுத்தார். இந்த நிலையில் பரமேஸ்வர் நேற்று காலை தன் மீது கல்வீசிதாக்கப்பட்ட பைரேனஹள்ளி கிராமத்தில் இருந்து மீண்டும் தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். கல்வீச்சில் மண்டையில் பலத்த காயம் ஏற்பட்டதால், தலையில் கட்டுப்போட்ட நிலையில் தொப்பி அணிந்துகொண்டு பரமேஸ்வர் அப்பகுதியில் வீடு, வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவருடன் கட்சிநிர்வாகிகளும், தொண்டர்களும் பிரசாரத்தில் ஈடுபட்டனர். முன்னதாக கொரட்டகெரே ராஜீவ் பவனில் காங்கிரஸ் பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தையும்,அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் ஏற்பாடுகளையும் பரமேஸ்வர் ஆய்வு செய்தார்.