கர்நாடகத்தில் இருப்பது 40 சதவீத கமிஷன் அரசு; ராகுல்காந்தி பரபரப்பு பேச்சு


கர்நாடகத்தில் இருப்பது 40 சதவீத கமிஷன் அரசு; ராகுல்காந்தி பரபரப்பு பேச்சு
x

கர்நாடகத்தில் இருப்பது 40 சதவீத கமிஷன் அரசு என்று பல்லாரி பொதுக்கூட்டத்தில் பா.ஜனதாவை கடுமையாக தாக்கி ராகுல்காந்தி பரபரப்பாக பேசினார்.

பெங்களூரு:

பிரமாண்ட பொதுக்கூட்டம்

அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, தமிழகத்தின் கன்னியாகுமரியில் தொடங்கிய பாதயாத்திரை நேற்று 38-வது நாளில் கர்நாடக மாநிலம் பல்லாரியை வந்தடைந்தது.

1000 கிலோ மீட்டர் மைல்கல்லை ராகுல்காந்தியின் பாதயாத்திரை கடந்திருந்த நிலையில், பல்லாரி டவுனில் உள்ள மைதானத்தில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் ராகுல்காந்தி பேசியதாவது:-

பாதயாத்திரை சுலபமானது

கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை 3,500 கிலோ மீட்டருக்கு பாரத் ஜோடோ பாதயாத்திரையை தொடங்கி உள்ளேன். ஆரம்பத்தில் 3,500 கிலோ மீட்டர் பாதயாத்திரை மேற்கொள்வது சுலபமான விஷயம் இல்லை என்று நினைத்தோம். பாதயாத்திரை தொடங்கிய பின்பு சுலபமானது. சிறு குழந்தைகள், மாற்றுதிறனாளிகள், முதியவர்கள், இளைஞர்கள் பாதயாத்திரையில் கலந்து கொண்டு பேசுவது, இன்னும் உற்சாகத்தை கொடுக்கிறது.

இந்த பாதயாத்திரைக்கு பாரத் ஜோடோ என்று பெயர் வைத்துள்ளோம். பா.ஜனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பால் நமது நாடு பிளவுபடுகிறது.

கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நடக்கும் பாதயாத்திரையில் பல்வேறு மதம், சாதி, இளைஞர்கள், பெண்கள் நம்முடன் ஒற்றுமையாக சேர்ந்து பயணிக்கிறார்கள்.

12½ கோடி பேர் வேலை வாய்ப்பு...

பாதயாத்திரையில் யாரோ ஒருவர் கீழே விழுந்தால் கூட, அனைவரும் வந்து உதவி செய்கிறார்கள். பாதயாத்திரையில் பங்கேற்கும் மாணவ, மாணவிகள் என்ஜினீயரிங் உள்ளிட்ட படிப்பை படிக்க இருப்பதாக சொன்னார்கள். படித்து முடித்ததுடன் வேலை கிடைக்குமா? என்று நான் கேட்டால், இல்லை என்று பதில் சொன்னார்கள். 2 கோடி வேலை வாய்ப்பை உருவாக்குவதாக பா.ஜனதாவினர் கூறினார்கள். நாட்டில் 2½ லட்சம் அரசு வேலை காலியாக உள்ளது.

நாட்டில் 12½ கோடி பேர் வேலை வாய்ப்பு இல்லாமல் இருக்கும் நிலை இருக்கிறது. கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சி தான் நடக்கிறது. இங்கு போலீஸ் வேலையில் சேர வேண்டும் என்றால், ரூ.80 லட்சம் லஞ்சம் கொடுக்க வேண்டும். பணம் இருந்தால் அரசு வேலையில் சேரலாம். பணம் இல்லாத ஏழைகள், வேலை வாய்ப்பற்றவர்களாகவே இருக்க வேண்டும். அரசு வேலையில் சேர வேண்டும் என்றால், லஞ்சம் கொடுத்தே தீர வேண்டும் என்ற நிலை உள்ளது.

40 சதவீத கமிஷன்

இந்த அரசு 40 சதவீத கமிஷன் அரசாகும். ஏதாவது வேலை நடக்க வேண்டும் என்றால், 40 சதவீத கமிஷன் கொடுக்க வேண்டும். வேலை வாய்ப்பின்மைக்கு எதிராக தற்போது நாடு முழுவதும் குரல் எழுப்பப்படுகிறது. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த பா.ஜனதா அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பா.ஜனதா ஆட்சிக்கு வரும் முன்பு ரூ.400 ஆக இருந்த சிலிண்டர் விலை தற்போது, ரூ.1,000-மாக உயர்ந்து விட்டது. பல்லாரிக்கும், எனது குடும்பத்திற்கும் ஒரு நெருக்கமான தொடர்பு இருக்கிறது. எனது தாய் சோனியா காந்தி பல்லாரி தொகுதியில் போட்டியிட்டு எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்தார். எனது தாய்க்கு பல்லாரி மாவட்ட மக்கள் ஆதரவு அளித்திருந்தார்கள். எனது பாட்டியான முன்னாள் பிரதமர் இந்தியா காந்தி சிக்கமகளூரு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார். இதனை எல்லாம் என்னால் மறக்க முடியாது.

காங்கிரசுக்கு ஆதரவு

கர்நாடகத்தில் என்னுடன் பாதயாத்திரையில் கலந்து கொண்டவர்களுக்கு, நன்றி தெரிவித்து கொள்கிறேன். பல்லாரி மாவட்டம் வெயில் அதிகமாகும். அதனை நானும் அனுபவித்தேன். கர்நாடகத்தில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், பல்லாரி மக்களுக்கு அனைத்து விதமான உதவிகள், திட்டங்களை கொண்டு வந்து செயல்படுத்த தயாராக இருக்கிறேன். காங்கிரஸ் கட்சியை பல்லாரி மக்கள் ஆதரிக்க வேண்டும்.

இவ்வாறு ராகுல்காந்தி பேசினார்.

இந்த பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவரான மல்லிகார்ஜுன கார்கே, முதல்-மந்திரி அசோக் கெலாட், சத்தீஸ்கர் முதல்-மந்திரி பூபேஸ் பாகேல், திக்விஜய் சிங் உள்ளிட்டோர் பங்கேற்று இருந்தார்கள்.


Next Story