"இந்தியாவில் தொழில் தொடங்க கர்நாடகம் பாதுகாப்பான மாநிலம்" - பசவராஜ் பொம்மை
கடந்த ஓராண்டாக அன்னிய நேரடி முதலீடுகளை ஈர்ப்பதில் கர்நாடகம் முதல் இடத்தில் உள்ளதாக பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
பெங்களூரு,
சுவிட்சர்லாந்து நாட்டின் தாவோஸ் நகரில் நடைபெற்று வரும் பொருளாதார மாநாட்டில் பங்கேற்க, கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கடந்த 22-ந்தேதி சென்றார். அவர் கர்நாடகத்தில் தொழில் முதலீடுகளை ஈர்க்க பல்வேறு தொழில் நிறுவன அதிபர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும் 20 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் பல நிறுவனங்களின் நிறுவனங்களை கர்நாடகத்தில் அமைக்க ஒப்பந்தம் செய்துள்ளார்.
இந்த நிலையில், பசவராஜ் பொம்மை தாவோஸ் நகரில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
"இந்தியாவில் தொழில் தொடங்க கர்நாடகம் பாதுகாப்பான மாநிலம். நாங்கள் பிற மாநிலங்களுடன் போட்டியிடவில்லை. முதலீடுகளை ஈர்ப்பதில் சர்வதேச அளவில் போட்டி போடுகிறோம். இந்தியாவில் உள்ள மொத்த வெளிநாட்டு நிறுவனங்களில் 50 சதவீதம் கர்நாடகத்தில் உள்ளது.
நடப்பு ஆண்டில் மேலும் 4 விமான நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. பெங்களூரு மீதான அழுத்தத்தை குறைக்கும் பொருட்டு அருகில் உள்ள நகரங்கள் மற்றும் 2, 3-வது நிலை நகரங்களில் தொழில் தொடங்க அரசு அதிக முன்னுரிமை அளிக்கிறது.
கடந்த ஓராண்டாக அன்னிய நேரடி முதலீடுகளை ஈர்ப்பதில் கர்நாடகம் முதல் இடத்தில் உள்ளது. இந்தியாவுக்கு வந்த அன்னிய நேரடி முதலீடுகளில் 42 சதவீதம் கர்நாடகத்திற்கு வந்துள்ளது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, மின்சார வாகனங்கள் உற்பத்தி, பேட்டரி சேமிப்புக்கு அரசு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது.
கர்நாடக அரசு ஏற்கனவே புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கொள்கையை அமல்படுத்தியது. ஹைட்ரஜன் எரிபொருளை அதிகளவில் உற்பத்தி செய்து அதை ஏற்றுமதி செய்வது குறித்தும் ஆலோசித்து வருகிறோம்.அதற்கான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தப்படுகின்றன."
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.