முஸ்லிம்களின் இட ஒதுக்கீடு ரத்து முடிவு மீதான தடை மேலும் நீட்டிப்பு- சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு


முஸ்லிம்களின் இட ஒதுக்கீடு ரத்து முடிவு மீதான தடை மேலும் நீட்டிப்பு- சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
x

கர்நாடகத்தில் முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீட்டை ரத்து செய்து கர்நாடக பிறப்பித்துள்ள உத்தரவுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை சுப்ரீம் கோர்ட்டு நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.

பெங்களூரு,

கர்நாடக பா.ஜனதா அரசு, கடந்த 2 மாதங்களுக்கு முன்பு முஸ்லிம்களுக்கான 4 சதவீத இட ஒதுக்கீட்டை ரத்து செய்தது. அந்த 4 சதவீத இட ஒதுக்கீடு லிங்காயத், ஒக்கலிகர் சமூகங்களுக்கு தலா 2 சதவீதம் என்று சரிசமமாக பகிர்ந்து அளிக்கப்பட்டது.

இதற்கு முஸ்லிம் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கர்நாடக அரசின் இந்த முடிவை ரத்து செய்ய கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.அந்த மனு மீது நீதிபதிகள் கே.எம்.ஜோசப், பி.வி.நாகரத்னா, அசானுத்தீன் அமானுல்லாஜ் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணை நடைபெற்று வருகிறது. இதற்கிடையே முஸ்லிம்களின் இட ஒதுக்கீட்டை ரத்து செய்து அரசு பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த மனு சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல் துஷ்யந்த் தாவே, "கர்நாடகத்தில் உள்துறை மந்திரி, முஸ்லிம்களின் இட ஒதுக்கீட்டை வாபஸ் பெற்றுள்ளதாக தினமும் பேசுகிறார். அவர் இத்தகைய கருத்தை கூறுவது ஏன்?" என்றார். அப்போது கர்நாடக அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதிடுகையில், "உள்துறை மந்திரி அவ்வாறு கூறியது பற்றி எனக்கு தெரியாது. ஆனால் மத அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க அரசியல் சாசனத்தில் இடம் இல்லை என்று யாராவது கூறினால் அதில் என்ன தவறு உள்ளது?. இது தான் உண்மை" என்றார்.

அப்போது நீதிபதி ஜோசப் பேசும்போது, "சொலிசிட்டர் ஜெனரல் இந்த கோர்ட்டில் கருத்து கூறுவதில் பிரச்சினை இல்லை. ஆனால் கோர்ட்டுக்கு வெளியே இதுகுறித்து கருத்து கூறுவது சரியல்ல. 1971-ம் ஆண்டு கோர்ட்டு உத்தரவுக்கு எதிராக பேசியதாக ஒரு அரசியல் தலைவர் மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இந்த கோர்ட்டை அரசியல் நோக்கத்திற்காக பயன்படுத்துவதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். இந்த விஷயம் குறித்து அரசியல் ரீதியான கருத்துகளை கூறக்கூடாது. கோர்ட்டு புனிதத்தை காக்க வேண்டியது அவசியம். நாங்கள் இந்த மனு மீதான விசாரணையை ஒத்தி வைக்கிறோம்" என்றார்.

அதைத்தொடர்ந்து அடுத்த உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை முஸ்லிம்களின் இட ஒதுக்கீட்டை ரத்து செய்துள்ள கர்நாடக அரசின் உத்தரவுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை நீட்டிக்கப்படுவதாக நீதிபதிகள் அறிவித்தனர். இந்த மனு மீதான அடுத்த விசாரணை வருகிற ஜூலை மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.


Next Story