காஷ்மீர் மாநில மருத்துவ காப்பீட்டு திட்ட ஊழல் முன்னாள் கவர்னரின் உதவியாளர் வீடு உள்பட 12 இடங்களில் சி.பி.ஐ. சோதனை


காஷ்மீர் மாநில மருத்துவ காப்பீட்டு திட்ட ஊழல் முன்னாள் கவர்னரின் உதவியாளர் வீடு உள்பட 12 இடங்களில் சி.பி.ஐ. சோதனை
x
தினத்தந்தி 18 May 2023 2:45 AM IST (Updated: 18 May 2023 2:45 AM IST)
t-max-icont-min-icon

காஷ்மீர் மாநிலத்தில் நடந்த மருத்துவ காப்பீட்டு திட்ட ஊழல் தொடர்பாக முன்னாள் கவர்னர் சத்யபால் மாலிக்கிடம் உதவியாளராக இருந்தவர் வீடு உள்பட 12 இடங்களில் சி.பி.ஐ. சோதனை நடத்தியது.

புதுடெல்லி,

காஷ்மீர் மாநில கவர்னராக இருந்தவர் சத்யபால் மாலிக். 2018-ம் ஆண்டு ஆகஸ்டு 23-ந் தேதி முதல் 2019-ம் ஆண்டு அக்டோபர் 30-ந் தேதி வரை கவர்னராக இருந்தார்.

பீகார், கோவா, மேகாலயா ஆகிய மாநிலங்களிலும் கவர்னராக இருந்துள்ளார். தனது பதவிக்காலம் முடிந்த பிறகு, காஷ்மீரில் நடந்த 2 ஊழல்களை பற்றி கூறினார்.

காஷ்மீர் மாநில அரசு ஊழியர்களுக்கு மருத்துவ காப்பீடு அளிக்கும் திட்டத்தை ரிலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ், ட்ரினிட்டி ரீ-இன்சூரன்ஸ் புரோக்கர்ஸ் லிமிடெட் ஆகிய நிறுவனங்களுக்கு வழங்கியதில் முறைகேடு நடந்ததாக அவர் குற்றம் சாட்டினார்.

கிரு நீர்மின்திட்டத்துக்கு ரூ.2 ஆயிரத்து 200 கோடி மதிப்புள்ள சிவில் பணிகளை ஒரு தனியார் நிறுவனத்துக்கு வழங்கியதில் ஊழல் நடந்ததாகவும் அவர் கூறினார். அதன்பேரில், 2 ஊழல் வழக்குகளை சி.பி.ஐ. பதிவு செய்தது.

கவர்னர் பதவியில் இருந்து ஒய்வுபெற்ற பிறகு இதுதொடர்பாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சத்யபால் மாலிக்கிடம் சி.பி.ஐ. வாக்குமூலம் பெற்றது. பின்னர், கடந்த மாதம் 28-ந் தேதியும் அவரிடம் விசாரணை நடத்தியது.

இந்த விசாரணையில் கிடைத்த தகவல்கள் அடிப்படையில், காஷ்மீர் காப்பீட்டு திட்ட ஊழல் தொடர்பாக சி.பி.ஐ. நேற்று அதிரடி சோதனை நடத்தியது.

சத்யபால் மாலிக், காஷ்மீர் கவர்னராக இருந்தபோது அவரிடம் உதவியாளராக இருந்த சவுனக் பாலி மற்றும் ஆடிட்டர் சஞ்சய் நரங், வீரேந்திரசிங் ராணா, கன்வர்சிங் ராணா, பிரியங்கா சவுத்ரி, அனிதா ஆகியோர் வீடுகளில் சோதனை நடந்தது.

டெல்லியில் 10 இடங்களிலும், ராஜஸ்தானில் 2 இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. ஏற்கனவே கிடைத்த நிதி ஆவணங்கள், மின்னணு ஆதாரங்கள், குற்றம் சாட்டப்பட்டவர்களின் வாக்குமூலம் ஆகியவற்றை ஆய்வு செய்ததன் அடிப்படையில், இச்சோதனை நடத்தப்பட்டதாக சி.பி.ஐ. தெரிவித்தது.


Next Story