முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையை மாற்ற முடிவு? கர்நாடக அரசியலில் திடீர் பரபரப்பு
சுதந்திர தினவிழாவுக்கு பின்பு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையை மாற்றவும், மந்திரிசபையை மாற்றியமைக்கவும் பா.ஜனதா மேலிட தலைவர்கள் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
பெங்களூரு,
கர்நாடகத்தில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையில் பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு (2023) நடைபெறும் சட்டசபை தேர்தலை பசவராஜ் பொம்மை தலைமையில் சந்திப்போம் என்று கடந்த பல மாதங்களுக்கு முன்பு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தெரிவித்திருந்தார். இந்த நிலையில், சமீபத்தில் தனியார் நிறுவனங்கள் மற்றும் தொலைகாட்சி சேனல்கள் நடத்திய கருத்து கணிப்புகளில் கர்நாடகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தலில் பா.ஜனதா குறைந்த தொகுதிகளில் தான் வெற்றி பெறும் என்று தெரிவித்திருந்தது.
மேலும் காங்கிரஸ் கட்சி அதிக இடங்ளில் வெற்றி பெற வாய்ப்புள்ளதாகவும் கருத்து கணிப்புகள் வெளியாகி இருந்தது. இது பா.ஜனதா தலைவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இதற்கிடையில், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கடந்த சில நாட்களுக்கு முன்பு பெங்களூருவுக்கு வந்திருந்தார். அப்போது அவர், முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, மாநில தலைவர் நளின்குமார் கட்டீல், முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா மற்றும் மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி இருந்தார்.
அப்போது மாநிலத்தில் ஆட்சியை பிடிக்க பல்வேறு அதிரடி மாற்றங்களை செய்ய பா.ஜனதா மேலிட தலைவர்கள் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. அதன்படி, முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, மாநில தலைவர் நளின்குமார் கட்டீலை மாற்றுவதற்கு பா.ஜனதா மேலிட தலைவர்கள் ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுபோல், சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களே இருப்பதால் மந்திரிசபையையும் மாற்றியமைக்க பா.ஜனதா மேலிடம் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற ஆட்சியிலும், கட்சியிலும் பல அதிரடி மாற்றங்களை செய்ய தலைவர்கள் தீர்மானித்திருப்பதாக கூறப்படுகிறது. அதன்படி வருகிற, 15-ந் தேதி சுதந்திர தினத்திற்கு பின்பு முதல்-மந்திரி, மாநில தலைவர் மாற்றப்படுவதுடன், மந்திரிசபையும் மாற்றியமைக்கப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது.