கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா குஜராத்துக்கு 2 நாள் சுற்றுப்பயணம்
டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் மற்றும் துணை முதல்-மந்திரி சிசோடியா குஜராத்துக்கு 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கின்றனர்.
வதோதரா,
குஜராத்தில் நடப்பு ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த 27 ஆண்டுகளாக பா.ஜ.க. ஆட்சியில் உள்ள நிலையில், இந்த முறை ஆம் ஆத்மி கட்சி ஆட்சியை பிடிக்கும் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.
பஞ்சாப்பில் தனது தேர்தல் அறிக்கை மற்றும் யுக்தியால் ஆம் ஆத்மி ஆட்சியை பிடித்து அதிகாரத்திற்கு வந்துள்ளது. இதேபோல குஜராத்திலும் ஆட்சியை பிடிக்க முனைப்பு காட்டி வருகிறது. இதன்படி, டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ச்சியாக குஜராத்திற்கு சுற்றுபயணம் மேற்கொண்டு வருகிறார்.
இதனையடுத்து, குஜராத்தில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்தால் 300 யூனிட் இலவச மின்சாரம், வேலை இல்லாத இளைஞர்களுக்கு வேலை வழங்கப்படும் அல்லது மாதம் 3 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும் போன்ற வாக்குறுதிகளை கெஜ்ரிவால் வெளியிட்டு உள்ளார்.
இந்த நிலையில், குஜராத்தில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்தால் 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து பெண்களுக்கும் ஆயிரம் ரூபாய் மாத உதவித்தொகையாக வழங்கப்படும் என மேலும் ஒரு வாக்குறுதியை டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
இதனால், இளைஞர்கள், பெண்கள் என பலதரப்பட்ட மக்களையும் கவரும் வகையிலான வாக்குறுதிகளை வெளியிட்டு மக்களை ஈர்த்து வருகிறார்.
இந்நிலையில், டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் மற்றும் துணை முதல்-மந்திரி சிசோடியா இருவரும் குஜராத்துக்கு 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கின்றனர். இதன்படி, அவர்கள் இருவரும் ஆமதாபாத் நகருக்கு வருகிற 22-ந்தேதி செல்கின்றனர்.
இதன்பின்பு ஹிமத்நகரில் பிற்பகல் 3 மணியளவில் நடைபெறும் பொது கூட்டம் ஒன்றில் அவர்கள் உரையாற்றுகின்றனர். இதன்பின்பு, அதற்கு அடுத்த நாள் (23-ந்தேதி) பவ்நகரில் அவர்கள் இருவரும் உரையாற்றுகின்றனர். இந்த கூட்டத்தில் என்ன வகையான வாக்குறுதிகள் வெளியிடப்படும் என்ற ஆவலில் மக்கள் காத்திருக்கின்றனர்.