கேரளா: சாலையோரம் நின்ற லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்து - வாலிபர் பலி
சாலையோரம் நின்ற லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்கு உள்ளானதில் வாலிபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
திருவனந்தபுரம்,
கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டம் காலடி அருகே உள்ள மலயாட்டூர் பகுதியை சேர்ந்தவர் ராஜூ. இவரது மகன்கள் ஸ்ரீராஜ் (வயது 22), ஸ்ரீஜித் ( 20 வயது). இருவரும் நேற்று இரவு வேலை நிமித்தமாக வெளியே சென்றுள்ளனர். பின்னர் இரவு 10.30 மணி அளவில் வீடு திரும்பி கொண்டிருந்தனர்.
இந்நிலையில் செம்பிசேரி சாலையில் ஒரு தனியார் நிறுவனத்தின் அருகே வந்து கொண்டிருந்தபோது இவர்கள் வந்த மோட்டார் சைக்கிள் அங்கு சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது பயங்கரமாக மோதியது. இதில் இருவரும் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தனர். இந்த விபத்தில் ஶ்ரீராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
உடனே அருகில் இருந்தவர்கள் காயம் அடைந்த ஸ்ரீஜித்தை மீட்டு அங்கமாலியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த காலடி போலீசார் ஶ்ரீராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக எர்ணாகுளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
காயம் அடைந்த ஸ்ரீஜித்துக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. போலீசார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.