கேரளா ஊழல் வழக்கு: சிவசங்கர், சுவப்னா சுரேஷ் இடையேயான சாட்டிங் வெளியீடு
கேரளாவில் ஊழல் வழக்கில், முதல்-மந்திரியின் முன்னாள் தலைமை செயலாளர் சிவசங்கர் மற்றும் சுவப்னா சுரேஷ் இடையே நடந்த உரையாடலை அமலாக்க துறை வெளியிட்டு உள்ளது.
திருவனந்தபுரம்,
கேரளாவில் முதல்-மந்திரி பினராயி விஜயன் தலைமையிலான அரசில் முன்னாள் தலைமை செயலாளராக இருந்தவர் எம். சிவசங்கர். ஐக்கிய அமீரகத்தின் தூதரகத்துக்கு வந்த பார்சல்களில் ரூ.14.82 கோடி மதிப்புள்ள 30 கிலோ தங்கம் கடத்தல் தொடர்பாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இவர் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் இவருடன் சரித்குமார், சுவப்னா சுரேஷ் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், கேரளாவில் வீடுகள் இல்லாதவர்களுக்கு வீடு கட்டி தரும் லைப் மிஷன் என்ற திட்டம் பினராயி விஜயன் தலைமையிலான அரசில் செயல்படுத்தப்பட்டு உள்ளது.
இதன்படி, திரிச்சூரில் வடக்கன்சேரி பகுதியில் 140 குடும்பங்களுக்கு வீடு கட்டி கொடுக்க முடிவானது. இதற்கான திட்ட செலவான ரூ.20 கோடியில் ரூ.14.50 கோடியை ஐக்கிய அரபு அமீரக தூதரகம் வழியே செஞ்சிலுவை சங்கம் சார்பில் மானிய தொகையாக வழங்கப்பட்ட பணம் செலவிடப்பட்டு உள்ளது.
லாபம் சாரா நோக்குடன் மனிதநேய பணிகளுக்கு உதவிடும் நோக்கில் செஞ்சிலுவை சங்கம் செயல்பட்டு வருகிறது என கூறப்படுகிறது. மீத தொகையை மருத்துவமனை ஒன்றின் கட்டுமான பணிக்கு பயன்படுத்தப்படும் என அதற்கான ஒப்பந்தம் தெரிவிக்கின்றது.
இதற்காக யூனிடேக் பில்டர்கள் கட்டுமான ஒப்பந்தம் பெற்று உள்ளனர். எனினும், அதன் எம்.டி. சந்தோஷ் ஈப்பன், திட்டத்திற்காக அனைத்து குற்றவாளிகளுக்கும் சேர்த்து ரூ.4.48 கோடி வரை லஞ்சம் கொடுக்கப்பட்டு உள்ளது என குற்றச்சாட்டு கூறினார்.
இதனை தொடர்ந்து அரசு, விசாரணைக்கு உத்தரவிட்டது. வழக்கில் குற்றவாளியான சரித்குமார், சுவப்னா சுரேஷ் உள்ளிட்டோர் சிவசங்கர் மீது குற்றச்சாட்டு கூறியுள்ளனர். அவருக்கு பங்கு உள்ளது என்று தெரிவித்து உள்ளனர். வழக்கில் சந்தீப் நாயர் என்பவர் மீதும் குற்றச்சாட்டு உள்ளது.
இதனை தொடர்ந்து 3 நாட்கள் விசாரணைக்கு பின்னர், சிவசங்கரை இந்த வழக்கில் அமலாக்க துறை நேற்று கைது செய்தது. சிவசங்கர் மற்றும் சுவப்னா சுரேஷ் இடையே நடந்த வாட்ஸ்அப் உரையாடலை அமலாக்க துறை வெளியிட்டு உள்ளது.
இதன்படி, கடந்த 2019-ம் ஆண்டு ஜூலை 31-ல் சுவப்னாவுக்கு சிவசங்கர் அனுப்பிய தகவலில், மிக கவனமுடன் இருக்கும்படி எச்சரிக்கை செய்துள்ளார். எதிலும் தலையிடாமல் இருக்கும்படி கூறியதுடன், தவறாக ஏதேனும் நடந்து விட்டால், பழியை தூக்கி உன் மீது போட்டு விடுவோம் என்றும் எச்சரித்து உள்ளார்.
இந்த நடைமுறையில் இருந்து விலகி இருக்கும்படியும் சுவப்னாவிடம் சிவசங்கர் கூறியுள்ளார். அதற்கு சுவப்னா, இந்த பணியை சரித் மற்றும் காலித்திடம் (வழக்கின் சந்தேகத்திற்குரிய மற்றொரு நபர்) கொடுத்து விடுவேன் என கூறியுள்ளார்.
சுவப்னாவுக்கு ஒரு வேலை கிடைக்க செய்யும்படி முதல்-மந்திரி தன்னிடம் கேட்டு கொண்டார் என்றும் சுவப்னாவிடம் சிவசங்கர் கூறியுள்ளார் என அந்த அறிக்கை தெரிவிக்கின்றது.
இந்த அறிக்கையை அமலாக்க துறை பணமோசடி தடுப்பு சட்ட கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளது. இருவர் இடையேயான இந்த உரையாடல் மற்றும் சான்றுகளின்படி, ஒப்பந்த ஒதுக்கீடு மற்றும் கமிஷனாக லஞ்ச பணம் பெறும் குற்ற செயல்களில் அரசு பிரதிநிதிகளுக்கு பெரிய பிணைப்பு இருப்பது தெளிவாக தெரிகிறது என்றும் அந்த அறிக்கை தெரிவித்து உள்ளது.