மங்களூருவில் தங்கும் விடுதியில் கேரள தம்பதி தூக்குப்போட்டு தற்கொலை
மங்களூருவில் தங்கும் விடுதியில் கேரள தம்பதி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டனர்.
மங்களூரு:
துணி வியாபாரி
கேரள மாநிலம் கண்ணூரை சேர்ந்தவர் ரவீந்திரன் (வயது 55). துணி வியாபாரி. இவரது மனைவி சுதா (வயது 50). இந்த நிலையில் கடந்த 6-ந்தேதி அவர்கள் கர்நாடக மாநிலம் மங்களூரு பந்தர் போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதிக்கு வந்தனர். அங்கு அவர்கள் அறை எடுத்து தங்கி இருந்தனர்.
இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக அவர்கள் அறையை விட்டு வெளியே வரவில்லை என தெரிகிறது. இதனால் சந்தேகமடைந்த விடுதி ஊழியர்கள், அறை கதவை தட்டினர். வெகுநேரம் தட்டியும் அவர்கள் கதவை திறக்கவில்லை.
தற்கொலை
இதனால், அவர்கள் பந்தர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் தனியார் தங்கும் விடுதிக்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள், அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது, அறைக்குள் கணவன்-மனைவி தூக்கில் பிணமாக தொங்கினர். இதனை பார்த்து போலீசாரும், விடுதி ஊழியர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து போலீசார், 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், கணவன்-மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
போலீஸ் விசாரணை
ஆனாலும் அவர்களின் தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து ரவீந்திரனின் உறவினருக்கு போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக பந்தர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.