கேரள இளம்பெண் கற்பழிப்பு எதிரொலி- தனியார் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடு


கேரள இளம்பெண் கற்பழிப்பு எதிரொலி-  தனியார் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடு
x
தினத்தந்தி 3 Dec 2022 9:31 PM GMT (Updated: 3 Dec 2022 9:32 PM GMT)

கேரள இளம்பெண் கற்பழிப்பு சம்பவத்தை தொடர்ந்து வாடகை கார்கள், ஆட்டோக்களை இயக்கும் தனியார் நிறுவனங்கள் குற்றப்பின்னணி கொண்டவர்களை பணியில் சேர்க்க தடை விதித்து போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.

பெங்களூரு:-

கர்நாடகத்தின் தலைநகரான பெங்களூருவுக்கு தகவல் தொழில்நுட்ப நகரம் என்ற பெயர் உள்ளது.

இளம்பெண் கற்பழிப்பு

அந்த பெயருக்கு ஏற்றார்போல் பெங்களூருவில் ஐ.டி. நிறுவனங்கள் அதிகளவில் உள்ளன. இந்த தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் இரவு நேரத்தில் பெண்கள் பணியாற்றி வருகின்றனர். நள்ளிரவில் பணி முடிந்து வீட்டிற்கு திரும்பும் பெண் ஊழியர்களுக்கு, நிறுவனங்கள் வாடகை கார் வசதியை ஏற்படுத்தி கொடுத்து உள்ளது.

ஒரு சில பெண் ஊழியர்கள் தாங்களாக ஓலா, ஊபர் நிறுவனங்களின் கார்கள், ஆட்டோக்களை பதிவு செய்து செல்கின்றனர். இப்படி செல்லும் போது ஒரு சில நேரத்தில் பெண் ஊழியர்கள் விரும்ப தகாத சம்பவங்களை எதிர்கொண்டு வருகிறார்கள். அதாவது வாடகை கார் டிரைவர்களால் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்படும் சம்பவங்கள் நடந்து வருகின்றன.

இந்த நிலையில் பெங்களூருவில் பைக் டாக்சியில் சென்ற கேரள இளம்பெண்ணை பைக் டாக்சி ஓட்டுனர், அவரது நண்பருடன் சேர்ந்து கூட்டு பலாத்காரம் செய்திருந்தார். இந்த சம்பவம் பெங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. மேலும் பைக் டாக்சி ஓட்டுனர், முறைப்படி பதிவு செய்யாமல் பைக் டாக்சி ஓட்டியதும் தெரியவந்தது.

போலீஸ் கமிஷனர் ஆலோசனை

இந்த நிலையில் பெங்களூரு நகரில் லட்சக்கணக்கில் ஓடும் ஆட்டோக்கள், வாடகை கார்களில் கணிசமானோர் முன்பதிவு செய்யாமல் சாலையில் ஓட்டுவதாக புகார் எழுந்துள்ளது. அவ்வாறு முன்பதிவு செய்யாமல் இயக்கப்படும் கார், ஆட்டோக்களில் பயணம் செய்யும் பெண்களுக்கு ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் அதுபற்றி அவர்கள் புகார் அளிக்க முடியாத நிலை கூட ஏற்பட்டு விடுகிறது.

இந்த நிலையில் பெங்களூரு போலீஸ் கமிஷனர் பிரதாப் ரெட்டி நேற்று தனது அலுவலகத்தில் ஓலா, ஊபர் நிறுவனங்கள், வாடகை கார் நிறுவனங்களின் உரிமையாளர்களுடன், வாடகை ஆட்டோக்கள், கார்களின் சங்க பிரதிநிதிகளுடன் பெண் குழந்தைகள் மற்றும் பெண் பயணிகளின் பாதுகாப்பு குறித்து ஆலோசனை கூட்டம் நடத்தினார். அப்போது அவர் பெண் பயணிகளுக்காக 112 அவசர எண் சேவையை அறிமுகப்படுத்தினார்.

கூடுதல் பணம் வசூலிப்பதாக புகார்

இந்த கூட்டத்தில் போலீஸ் கமிஷனர் பிரதாப் ரெட்டி பேசும்போது கூறியதாவது:-

பெங்களூருவில் இரவு நேரங்களில் வாடகை கார்கள், ஆட்டோக்கள், பைக் டாக்சியில் பயணிக்கும் பெண் குழந்தைகள், பெண்கள் சில சமயங்களில் அசம்பாவித சம்பவங்களை எதிர்கொள்கின்றனர். பாலியல் தொல்லைக்கு ஆளாகின்றனர். சில வாடகை கார்கள், ஆட்டோ டிரைவர்கள் பயணிகளிடம் மிரட்டி கூடுதல் பணம் வசூலித்து வருகின்றனர். இதனை தடுக்க வேண்டியது அவசியம். வாடகை கார், ஆட்டோ நிறுவனங்களில் பணிக்கு விண்ணப்பிக்கும் டிரைவர்களின் பின்னணி குறித்து விசாரிக்க வேண்டும். 112 அவசர சேவை எண் குறித்து பயணிகளுக்கு செயலி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

பணியில் சேர்க்க கூடாது

பணிக்கு சேரும் டிரைவர்களின் முகவரி சரியாக உள்ளதா என்றும் ஆய்வு நடத்த வேண்டும். குற்றப்பின்னணி கொண்ட டிரைவர்களை எக்காரணம் கொண்டும் பணியில் சேர்க்கக் கூடாது. டிரைவர்கள் நடத்தை பற்றி மாதம் ஒரு முறை கண்காணிக்க வேண்டும். உணவு விற்பனை பிரதிநிதிகள் சரியான முகவரிக்கு சென்று வாடிக்கையாளர்களுக்கு உணவு வினியோகம் செய்ய வேண்டும். இருசக்கர வாகனங்களில் சென்று வாடிக்கையாளர்களுக்கு உணவு வினியோகம் செய்யும் பிரதிநிதிகள் சரியான நேரத்தில் உணவே கொடுக்க வேண்டும் என்று சாலையில் வேகமாக செல்கின்றனர்.

மேலும் போக்குவரத்து விதிகளையும் அவர்கள் மதிப்பது இல்லை. போக்குவரத்து விதிகளை மதிப்பது குறித்து உணவு விற்பனை பிரதிநிதிகளுக்கு, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அவசர தேவைக்கு நோடல் அதிகாரிகளை நியமிக்க வேண்டும். வாடகை கார், ஆட்டோ டிரைவர்கள், உணவு விற்பனை பிரதிநிதிகள் ஏதாவது தவறு செய்தால் அதற்கு சம்பந்தப்பட்ட நிறுவனம் தான் பொறுப்பு. அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த கூட்டத்தில் வாடகை கார், ஆட்டோ நிறுவனங்களின் உரிமையாளர்களும் தங்களது கஷ்டங்களை முன்வைத்தனர். இதனை கேட்டுக்கொண்ட கமிஷனர் பிரதாப் ரெட்டி, உங்கள் கஷ்டங்களை தீர்க்க நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி அளித்தார்.


Next Story