கேரளா: நரபலி வழக்கில் கைதானவர்கள் ஆளும் கட்சியை சார்ந்தவர்கள் என்ற குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது - சிபிஎம்


கேரளா: நரபலி வழக்கில் கைதானவர்கள் ஆளும் கட்சியை சார்ந்தவர்கள் என்ற குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது -  சிபிஎம்
x
தினத்தந்தி 14 Oct 2022 11:20 AM IST (Updated: 14 Oct 2022 12:11 PM IST)
t-max-icont-min-icon

கேரள மாநிலத்தில் இரண்டு பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள எலந்தூர் கிராமத்தில், இரண்டு பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கேரளாவை உலுக்கிய இந்த கொடூரமான கொலைகள் பற்றிய விவரங்கள், அக்டோபர் 11 அன்று வெளிவந்தன. அதன் தொடர்ச்சியாக, பகவல் சிங் (68) என்ற மசாஜ் சிகிச்சை நிபுணர் மற்றும் அவரது மனைவி லைலா (59) மற்றும் பிரதான குற்றவாளி முகமது ஷபி (52) ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதனிடையே, கைதான பகவல் சிங் - லைலா தம்பதி சிபிஎம்(மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட்) கட்சித் தொண்டர்கள் என்று காங்கிரசும் பாஜகவும் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியை தாக்கின.

கொலையாளிகளில் ஒருவர் சிபிஎம் தொண்டர் என்று மாநில பாஜக தலைவர் கே சுரேந்திரன் குற்றம் சாட்டியிருந்தார். மேலும், குற்றத்தில் தீவிர மதக் குழுக்களின் தலையீடும் இருந்தது என்று கூறினார்.

இந்த நிலையில், இந்த குற்றச்சாட்டுகளை மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் மறுத்துள்ளது. சிபிஎம் கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க பாஜக மற்றும் காங்கிரஸால் பரப்பப்பட்ட பொய்ப் பிரச்சாரம் இது என்று சிபிஎம் தெரிவித்துள்ளது.

இது குறித்து, சிபிஎம் மாவட்டச் செயலாளர் கே.பி.உதயபானு கூறுகையில், இரட்டை கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தம்பதியினர், கட்சி உறுப்பினர்கள் அல்ல. குற்றம் சாட்டப்பட்ட தம்பதியினருக்கு கட்சியிலோ அல்லது அதன் தொடர்புடைய அமைப்புகளிலோ எந்தப் பதவியும் இல்லை.

குற்றம் சாட்டப்பட்ட தம்பதிகள், சிபிஐ(எம்)-ன் தீவிர உறுப்பினர்கள் என்ற குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றவை. சிபிஎம் கட்சி, பகுத்தறிவற்ற நம்பிக்கைகள் மற்றும் மூடநம்பிக்கைகளுக்கு எதிராகப் போராடுவதில் முன்னணியில் உள்ளது என்று தெரிவித்தார்.


Related Tags :
Next Story