கேரளா: மாயமான பள்ளி ஆசிரியை வீட்டில் பிணமாக மீட்பு - கணவர் தலைமறைவு
தலைமறைவான பள்ளி ஆசிரியரின் கணவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
திருவனந்தபுரம்,
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் கட்டப்பனை அருகே உள்ள காஞ்சியார் பகுதியை சேர்ந்தவர் விஜேஷ். இவருடைய மனைவி அனு மோள் (வயது 27). இவர் அங்குள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார்.
இந்தநிலையில் கடந்த 17-ந் தேதி வழக்கம் போல் அனு மோள் பள்ளிக்கு புறப்பட்டு சென்றார். பின்னர் மாலையில் வீட்டுக்கு திரும்பி வந்தார். ஆனால் மறுநாளில் இருந்து அவர் பள்ளிக்கு செல்லவில்லை. இது அனு மோளின் பெற்றோருக்கு தெரியவந்தது.
உடனே அவர்கள் விஜேஷை தொடர்பு கொண்டு கேட்டனர். அப்போது அனு மோள் வழக்கம்போல் பள்ளிக்கு சென்றுவிட்டதாக கூறி உள்ளார். இதனால் அனுமோளின் பெற்றோருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து மகளை காணவில்லை என்று கட்டப்பனை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.
அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்தநிலையில் நேற்று முன்தினம் அனுமோளின் தம்பி அலெக்ஸ் அக்காவை பல இடங்களில் தேடியும் கண்டு பிடிக்க முடியாததால், அக்காள் வீட்டுக்கு சென்று பார்த்தார். அப்போது கதவு பூட்டப்பட்டு இருந்தது. ஆனால் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது.
இதனால் சந்தேகம் அடைந்த அவர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அங்கு படுக்கை அறையில் உள்ள கட்டிலுக்கு அடியில் ஒரு கம்பளி போர்வையில் அனு மோளின் உடல் சுற்றி வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. அக்காளின் உடலை பார்த்ததும் அலெக்ஸ் கதறி அழுதார்.
இதுபற்றி உடனடியாக கட்டப்பனை போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அனுமோள் உடலை மீட்டனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக அங்குள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுமோள் உடலை அனுப்பி வைத்தனர்.
இந்த தகவல் அறிந்ததும் விஜேஷ் தலைமறைவானார். எனவே அனுமோளை விஜேஷ் தான் கொலை செய்திருக்க வேண்டும் என்று போலீசார் கருதுகின்றனர். அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.