கேரளாவின் முதல் பெண் தபால்காரர் கே.ஆர்.ஆனந்தவல்லி காலமானார்
கேரளாவின் முதல் பெண் தபால்காரர் கே.ஆர்.ஆனந்தவல்லி முதுமை மற்றும் உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார்.
கேரளா:
கேரளாவில் முதல் பெண் தபால்காரராக நியமனம் செய்யப்பட்டவர் கே.ஆர்.ஆனந்தவல்லி (வயது 90). இவரது கணவர் ராஜன். ஓய்வு பெற்ற ஆசிரியர். இவர்களது மகன் தனராஜ். கே.ஆர்.ஆனந்தவல்லி ஆலப்புழா மாவட்டம் தத்தபள்ளி தபால் நிலையத்தில் முதன் முதலாக பெண் தபால்காரராக பணியில் சேர்ந்தார்.
பட்டதாரியான அவர், கேரளாவில் முதல் பெண் தபால்காரர் என்ற பெருமையை பெற்றார். தொடர்ந்து அவர் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள பல்வேறு தபால் நிலையங்களில் தபால்காரர், அஞ்சலக அலுவலர் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டார்.
இதற்கிடையே கடந்த 1991-ம் ஆண்டு கே.ஆர்.ஆனந்தவல்லி பணியில் இருந்து ஓய்வு பெற்றார். அதன் பின்னர் அவர் ஆலப்புழாவில் வசித்து வந்தார். கடந்த சில மாதங்களால் உடல்நிலை பாதிக்கப்பட்டு, அவர் மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் நேற்று முதுமை மற்றும் உடல் நலக்குறைவால் கே.ஆர்.ஆனந்தவல்லி தனது வீட்டில் மரணம் அடைந்தார்.