நாட்டு வெடிகுண்டு வீச்சு, துப்பாக்கிச்சூடு: எம்.எல்.ஏ. கொலை வழக்கு முக்கிய சாட்சி பட்டப்பகலில் படுகொலை - வீடியோ
முக்கிய சாட்சி சுட்டுக்கொலை செய்யப்பட்ட நிலையில் தடுக்க முயன்ற பாதுகாவலரும் சுட்டுக்கொல்லப்பட்டார்.
லக்னோ,
உத்தரபிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ. ராஜூ பால். இவர் 2005-ம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். இந்த கொலைவழக்கில் சமாஜ்வாதி கட்சி முன்னாள் எம்.எல்.ஏ, எம்.பி.யுமான அதிக்யு அகமது கைது செய்யப்பட்டார். மாபியா கும்பலை சேர்ந்த அதிக்யு அகமது தற்போது குஜராத் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே, எம்.எல்.ஏ. ராஜூ பால் கொலை வழக்கில் முக்கிய சாட்சி உமேஷ் பால் ஆவார். முக்கிய வழக்கில் முக்கிய சாட்சி என்பதால் உமேஷின் உயிருக்கு ஆபத்து நிலவி வந்தது. இதனால், உமேஷுக்கு துப்பாக்கி ஏந்திய 2 போலீசார் பாதுகாவலர்களாக அரசு நியமித்தது. 2 பாதுகாவலர்களும் உமேஷுக்கு பாதுகாப்பாக இருந்து வந்தனர்.
இந்நிலையில், பிரக்யாராஜ் நகரில் பரபரப்பான சாலை அருகே உள்ள தனது வீட்டிற்கு உமேஷ் நேற்று மாலை காரில் சென்றார். வீட்டின் அருகே காரை நிறுத்திவிட்டு கீழே இறங்கியபோது அப்போது அங்குவந்த கும்பல் கார் மீது நாட்டு வெடிகுண்டு வீசியது.
பின்னர், காரில் இருந்து கீழே இறங்கிய உமேஷ் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த உமேஷின் பாதுகாவர்கள் பதில் தாக்குதல் நடத்த முயற்சித்துள்ளனர். அப்போது பாதுகாவர்கள் மீதும் துப்பாக்கிச்சூடு நடத்திய அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச்சென்றது.
நாட்டு வெடிகுண்டு வீச்சு மற்றும் துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த 3 பேரும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர்கள் படுகாயமடைந்த உமேஷ் பால் மற்றும் அவரது பாதுகாவலர் சந்தீப் நிஷத் ஆகிய 2 பேரும் உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர். உமேஷின் மற்றொரு பாதுகாவர் படுகாயங்களுடன் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
பட்டப்பகலில் நாட்டு வெடிகுண்டு வீசி, துப்பாக்கிச்சூடு நடத்தி எம்.எல்.ஏ. கொலை வழக்கு முக்கிய சாட்சி படுகொலை செய்யப்பட்ட நிலையில் தடுக்க முயன்ற பாதுகாவலரும் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.