மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் முதல்கட்ட மத்திய தேர்தல் குழு கூட்டம்
மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் குஜராத் சட்டசபை தேர்தலுக்கான முதல்கட்ட மத்திய தேர்தல் குழு கூட்டம் நடைபெற்றது.
புதுடெல்லி,
காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்றுள்ள மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் கட்சியின் முதல் தேர்தல் குழுக் கூட்டம் நடைபெற்றது. 24 ஆண்டுகளுக்கு பிறகு நேரு-காந்தி குடும்பத்தைச் சாராத ஒருவரான மல்லிகார்ஜுன கார்கே காங்கிரஸ் கட்சியின் தலைவராக இன்று காலை பொறுப்பேற்றார்.காங்கிரஸ் கட்சித் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட கார்கே, ராஜ்காட்டில் அமைந்துள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்துக்குச் சென்று மரியாதை செலுத்திய நிலையில், கட்சி அலுவலகத்தில் மத்திய தேர்தல் குழுக் கூட்டத்தில் பங்கேற்றார்.மல்லிகார்ஜுன தலைமையில் நடைபெற்ற முதல் தேர்தல் குழுக் கூட்டத்தில் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, கே.சி.வேணுகோபால் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பங்கேற்றனர்.
அடுத்தடுத்து மாநில பேரவைத் தோ்தல்களில் தோல்வி கண்டு வரும் காங்கிரஸ், பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான பாஜகவை எதிா்கொள்ள முடியாமல் போராடுகிறது. ராஜஸ்தான், சத்தீஸ்கா் என 2 மாநிலங்களில் மட்டுமே சொந்த பலத்தில் காங்கிரஸ் ஆட்சியில் இருக்கிறது.விரைவில் குஜராத், ஹிமாசல பிரதேசத்தில் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், இரு மாநிலங்களிலும் காங்கிரஸை ஆட்சியில் அமா்த்த வேண்டியதே அவரது முதன்மையான பொறுப்பாக பாா்க்கப்படுகிறது.