கல்லூரி மாணவரை கடத்திய தொழில் அதிபர் உள்பட 4 பேர் கைது


கல்லூரி மாணவரை கடத்திய தொழில் அதிபர் உள்பட 4 பேர் கைது
x

பருப்பு வாங்கியதற்கு ரூ.3 கோடி கொடுக்காததால், கல்லூரி மாணவரை கடத்திய பருப்பு தொழில் அதிபர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். போலீசாரின் துரித நடவடிக்கையால், 4 மணி நேரத்தில் மாணவர் பத்திரமாக மீட்கப்பட்டார்.

பெங்களூரு

பருப்பு வாங்கியதற்கு ரூ.3 கோடி கொடுக்காததால், கல்லூரி மாணவரை கடத்திய பருப்பு தொழில் அதிபர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். போலீசாரின் துரித நடவடிக்கையால், 4 மணி நேரத்தில் மாணவர் பத்திரமாக மீட்கப்பட்டார்.

பருப்பு வியாபாரி

ஆந்திர மாநிலம் அனந்தபூரை சேர்ந்தவர் சுரேஷ். பருப்பு வியாபாரி. இவரது மகன் ஜெகதீஸ்(வயது 19). இவர் பெங்களூரு எலகங்காவில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். அதற்காக அவர் கட்டிகேனஹள்ளி முனீஸ்வராநகர் ரோட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தனது நண்பர்களுடன் வசித்து வருகிறார். கடந்த 18-ந் தேதி அவர் தனது தோழி யோஜிதா என்பவருடன் மோட்டார் சைக்கிளில் குடியிருப்புக்கு சென்று கொண்டிருந்தார்.


அப்போது அவர்களை காரில் வந்த மர்மநபர்கள் வழிமறித்தனர். பின்னர் அவர்கள் ஜெகதீசை காரில் கடத்திச் சென்றனர். இதுகுறித்து யோஜிதா எலகங்கா போலீசில் புகார் அளித்தார். மேலும், அந்த காரின் பதிவு எண்ணையும் போலீசிடம் கூறினார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். காரின் பதிவு எண்ணை கொண்டு நடத்திய விசாரணையில் அவர்கள் துமகூரு நோக்கி சென்று கொண்டிருந்தது தெரியவந்தது.

திடுக்கிடும் தகவல்கள்

இதற்கிடையே அவர்களை போலீசார் பின்தொடர்ந்து சென்றனர். போலீசார் பின்தொடர்வதை அறிந்த கடத்தல் கும்பல் சித்ரதுர்கா மாவட்டம் இரியூர் நோக்கி சென்றனர். அதன்பேரில் போலீசார் இரியூர் அருகே அந்த காரை மடக்கி பிடித்தனர். அதில் சோதனை நடத்தியபோது, கல்லூரி மாணவர் ஜெகதீஸ் மற்றும் மர்மநபர்கள் 4 பேர் இருந்தனர்.இதையடுத்து ஜெகதீசை பத்திரமாக மீட்ட போலீசார், காரில் இருந்த 4 பேரையும் கைது செய்தனர்.


பின்னர் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் கலபுரகியை சேர்ந்த ரமேஷ் ரதோடு(43), ரிஸ்வான் பட்டீல்(23), இந்திரஜித்(23) மற்றும் ஹரிஷ் குமார்(24) ஆகிய 4 பேர் என்பதும், அதில் ரமேஷ் ரதோடு கலபுரகியில் பருப்பு ஆலை நடத்தி வருவதும் தெரியவந்தது. அவர்களிடம் தொடர்ந்து நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது

போலீஸ் விசாரணை

அதாவது மாணவர் ஜெகதீசின் தந்தை சுரேஷ் வியாபாரத்திற்காக ரமேஷ் ரதோடுவிடம் ரூ.3 கோடிக்கு பருப்பு வாங்கி உள்ளார். ஆனால் பல மாதங்கள் ஆகியும் அவர் அந்த பணத்தை திருப்பி கொடுக்காமல் இருந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஆலை அதிபர் ரமேஷ் ரதோடு ரூ.3 கோடி பணத்தை திரும்ப பெறுவதற்காக, தனது கூட்டாளிகளான ரிஸ்வான் பட்டீல், இந்திரஜித், ஹரிஷ் குமார் ஆகியோர் உதவியுடன் சுரேசின் மகனான ஜெகதீசை கடத்தினார் என்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. கைதான 4 பேரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கடத்தப்பட்ட 4 மணி நேரத்தில் போலீசாரின் துரித நடவடிக்கையால் ஜெகதீஷ் மீட்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story