சிறுவனை கடத்தி ரூ.15 லட்சம் கேட்டு மிரட்டல்: 6 பேர் கைது


சிறுவனை கடத்தி ரூ.15 லட்சம் கேட்டு மிரட்டல்:  6 பேர் கைது
x

சிறுவனை கடத்தி ரூ.15 லட்சம் கேட்டு மிரட்டல் விடுத்த 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

பெங்களூரு: விஜயநகர் மாவட்டம் ஒசப்பேட்டே தாலுகா அகரிபொம்மனஹள்ளி பழைய டவுன் பகுதியை சேர்ந்தவன் அத்விக் (வயது 5). இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டின் முன்பு விளையாடி கொண்டிருந்த அத்விக்கை, மர்மநபர்கள் கடத்தி சென்றுவிட்டனர். பின்னர் மர்மநபர்கள் அத்விக்கின் பெற்றோரை தொடர்புகொண்டு, உங்களது மகனை கடத்திவிட்டதாகவும், ரூ.15 லட்சம் கொடுத்தால் உயிருடன் ஒப்படைப்பதாகவும் மிரட்டி உள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அத்விக்கின் பெற்றோர், அகரிபொம்மனஹள்ளி போலீசில் புகார் அளித்தனர்.

இதையடுத்து போலீசார் அத்விக்கின் பெற்றோருக்கு அறிவுரை கூறி, கடத்தல்காரர்களை பொறி வைத்து பிடிக்க முடிவு செய்தனர். அதன்படி அத்விக்கின் பெற்றோர், மர்மநபர்களை தொடர்புகொண்டு பணம் கொடுப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து மர்மநபர்கள் கூறிய இடத்துக்கு அவர்கள் பணத்தை கொண்டு சென்று கொடுத்தனர். அப்போது அங்கு மறைந்து இருந்த போலீசார், மர்மநபர்களை கையும், களவுமாக பிடித்தனர். மேலும் அவர்களிடம் இருந்து அத்விக்கை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். மேலும் பணத்தையும் பறிமுதல் செய்தனர். இதையடுத்து போலீசார் அத்விக்கை கடத்தியதாக 7 பேரை கைது செய்தனர். விசாரணையில் அவர்கள், கரீம் ஷாப், சன்னபசவா சோமப்பா, ரமேஷ், கோட்ரேஷ் ஜம்பப்பா, பசவராஜ், ரவி என்பது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து 7 செல்போன்கள், 2 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து அகரிபொம்மனஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story