கோவில் பூசாரியை கொன்று நகை-பணம் கொள்ளை மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
எச்.டி.கோட்டை அருகே கோவில் பூசாரியை கொன்று நகை-பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்த பயங்கர சம்பவம் நடந்துள்ளது.
மைசூரு:
கோவில் பூசாரி
மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டை தாலுகா கணேஷ்புரா கிராமத்தை சேர்ந்தவர் கெம்பா தேவரு(வயது 55). இவர், அதேப்பகுதியில் உள்ள விநாயகர் கோவில் பூசாரியாக இருந்தார்.
இந்த நிலையில் கடந்த 17-ந்தேதி(சனிக்கிழமை) இரவு கெம்பா தேவரு மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.
கொலை-கொள்ளை
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்ட மர்மநபர்கள், நள்ளிரவில் கெம்பா தேவருவின் வீட்டிற்குள் புகுந்துள்ளனர். பின்னர் மர்ம நபர்கள், அவரை கயிற்றால் கட்டிப்போட்டு சத்தம்போடாதபடி வாயில் துணியை திணித்துள்ளனர். பின்னர் அவரின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர். இதையடுத்து மர்ம நபர்கள், வீட்டில் பீரோ உள்ளிட்ட இடங்களில் இருந்த நகை, பணத்தை கொள்ளையடித்தனர். இதைதொடர்ந்து கெம்பா தேவருவின் உடலை உள்ளே வைத்து வீட்டை பூட்டி சாவியை கீழே வீசிச் சென்றுள்ளனர். நேற்றுமுன்தினம் காலை கோவிலை திறக்க பூசாரி கெம்பா தேவரு வராததால் சந்தேகமடைந்த கிராம மக்கள் அவரது வீட்டிற்கு வந்தனர். அப்போது வீடு பூட்டி கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் கீழே சாவி கிடப்பதை பார்த்தனர்.
இதையடுத்து சாவியை எடுத்து கிராம மக்கள் வீட்டை திறந்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது வீட்டில் பூசாரி கெம்பா தேவரு உடல் கட்டிப்போட்ட நிலையில் இறந்து பிணமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
இதுபற்றி எச்.டி.கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அதில் மர்மநபர்கள், பூசாரி கெம்பா தேவருவை கொன்று நகை-பணம் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. அதன் மதிப்பு தெரியவில்லை. இதற்கிடையே கொலையான கெம்பா தேவருவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து போலீஸ் மோப்ப நாய் வரவழைத்து சோதனை நடத்தப்பட்டது. மோப்பா நாய் கொலை நடந்த வீட்டில் இருந்து சிறிதுதூரம் ஓடி நின்றுவிட்டது. அது யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை.
தடயவியல் நிபுணர்கள் வந்து மர்மநபர்களின் கைரேகைகளை பதிவு செய்து ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து எச்.டி.கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடிவருகிறார்கள்.