கட்டுமான அதிபர் வீட்டுக்குள் புகுந்து காவலாளியை கொன்று நகை-பணம் கொள்ளை


கட்டுமான அதிபர் வீட்டுக்குள் புகுந்து காவலாளியை கொன்று நகை-பணம் கொள்ளை
x
தினத்தந்தி 19 Dec 2022 12:15 AM IST (Updated: 19 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் கட்டுமான அதிபர் வீட்டுக்குள் புகுந்த மர்மநபர்கள் காவலாளியை கொன்று நகைகள், பணத்தை கொள்ளையடித்து சென்ற பயங்கரம் நடந்துள்ளது. தலைமறைவாகி விட்ட மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

கோரமங்களா:

காவலாளியின் கை, கால்களை கட்டி...

பெங்களூரு கோரமங்களா, 6-வது பிளாக்கில் வசித்து வருபவர் ராஜகோபால் ரெட்டி. இவர், கட்டுமான நிறுவன அதிபர் ஆவார். இவரது வீட்டில் கரியப்பா என்பவர் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவு ராஜகோபால் ரெட்டியின் உறவினர் வீட்டில் சுப நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், கலந்துகொள்ள ராஜகோபால் ரெட்டி தனது குடும்பத்துடன் புறப்பட்டு சென்றிருந்தார்.

இதனால் காவலாளி கரியப்பா மற்றும் வீட்டு வேலைக்காரர் மட்டும் இருந்தனர். வேலைக்காரர் வீட்டு சமையல் அறையில் படுத்திருந்ததாக தெரிகிறது. இந்த நிலையில், நள்ளிரவில் மர்மநபர்கள் வீட்டுக்குள் புகுந்தனர். இதை பார்த்ததும் காவலாளி கரியப்பா கூச்சல் போட முயன்றார். உடனே கரியப்பாவை தாக்கியதுடன், அவரது கை, கால்களை கட்டினார்கள். அத்துடன் அவரது வாயில் பிளாஸ்டரையும் ஒட்டினார்கள்.

நகை, பணம் கொள்ளை

இதன் காரணமாக அவரால் சத்தம் போட முடியாமல் போனதுடன், மூச்சு திணறலும் ஏற்பட்டது. பின்னர் சிறிது நேரத்தில் அவர் துடிதுடித்து உயிர் இழந்தார். அதன்பிறகு, படுக்கை அறைக்கு சென்ற மர்மநபர்கள் பீரோவில் இருந்த நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்று விட்டார்கள். நேற்று அதிகாலையில் எழுந்த வேலைக்காரர் பார்த்தபோது தான் கரியப்பா கொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார்.

இதுபற்றி அவர் உடனடியாக ராஜகோபால் ரெட்டிக்கு தகவல் தெரிவித்தார். அவர், கோரமங்களா போலீசாரிடம் கூறினார். சம்பவ இடத்திற்கு கோரமங்களா போலீசார் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் விரைந்து வந்து விசாரித்தனர். மேலும் கரியப்பாவின் உடலை கைப்பற்றியும் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

மர்மநபர்களுக்கு வலைவீச்சு

அப்போது கரியப்பாவின் கை, கால்களை கட்டியதுடன், வாய் மற்றும் மூக்கில் பிளாஸ்டர் ஒட்டியதால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிர் இழந்திருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் ராஜகோபால் ரெட்டியின் வீட்டில் இருந்து ரூ.5 லட்சம் மற்றும் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, மர்மநபர்களை பிடிக்க அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இதுகுறித்து கோரமங்களா போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாகி விட்ட மர்மநபர்களை வலைவீசி தேடிவருகிறார்கள்.


Next Story