மெட்ரோ ரெயிலில் வெட்டிங் போட்டோ சூட் நடத்த கொச்சி நிர்வாகம் அனுமதி..!
கொச்சி மெட்ரோ நிர்வாகம் மெட்ரோ ரெயிலில் வெட்டிங் போட்டோ சூட் நடத்த அனுமதி அளித்துள்ளது.
கொச்சி,
திருமண நிகழ்வுகளில் புகைப்படங்கள் முக்கிய பங்காற்றி வருகிறது. சமீப காலமாக திருமண போட்டோ சூட் டிரெண்டாகி வருகிறது. கேரளாவில் மெட்ரோ ரெயிலில் திருமண போட்டோ சூட் நடத்த கொச்சி மெட்ரோ ரெயில் நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.
மெட்ரோ ரெயிலை லாபகரமானதாக மாற்றும் நோக்கில் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கொச்சி மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. முன்னதாக, திரைப்படங்கள் மற்றும் விளம்பரங்களின் படப்பிடிப்புகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டன. இந்த நிலையில் தற்போது திருமண போட்டோ சூட்களுக்கு குறைவான கட்டணத்தில் அனுமதி அளிக்கப்படுகிறது.
ஒரு மெட்ரோ ரெயில் பெட்டிக்கு அதிகபட்சமாக 2 மணி நேரத்திற்கு முன்பதிவு செய்யலாம். நிற்கும் ரெயிலுக்கு கட்டணமாக 5 ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்படுகிறது. இதற்காக ரூ.10 ஆயிரம் வைப்புத் தொகையாக செலுத்த வேண்டும். ஓடும் ரெயில் வேண்டும் என்றால் 2 மணி நேரத்திற்கு ஒரு பெட்டிக்கு கட்டணமாக ரூ.8 ஆயிரம் செலுத்த வேண்டும். வைப்புத் தொகை ரூ.25 ஆயிரம் செலுத்த வேண்டும்.
மேலும், 3 மெட்ரோ ரெயில் பெட்டிகள் வேண்டுமானால் நிற்கும் ரெயிலில் 2 மணி நேரத்திற்கு ரூ.12 ஆயிரம் செலுத்த வேண்டும். ஓடும் ரெயிலுக்கு ரூ.17,500 செலுத்த வேண்டும். வைப்புத் தொகையாக ரூ.25 ஆயிரம் வசூலிக்கப்படுகிறது. ரெயில் ஆலுவாவில் இருந்து பெட்டா வரை இயக்கப்படும்.