கொல்கத்தா: ஓடும் பஸ்சில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை - ஒருவர் கைது
கொல்கத்தா ஓடும் பஸ்சில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த பாலியல் தொல்லை சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொல்கத்தா,
மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் உள்ள கஸ்பா பகுதியில் இன்று காலை 9.30 மணியளவில் ஓடும் பஸ்சில் இளம்பெண்ணுக்கு சக பயணி ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த பெண் கூச்சலிட்ட நிலையில், சக பயணிகள் அந்த நபரை பிடித்து தாக்கியுள்ளனர்.
இதையடுத்து குற்றம்சாட்டப்பட்ட நபர் பேருந்தில் இருந்து இறங்கி தப்பியோட முயன்றார். அவரை அங்கிருந்தவர்கள் மடக்கிப் பிடித்து கஸ்பா காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது குறித்து பாலியல் தொல்லைக்கு ஆளான பெண் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், போலீசார் அந்த நபரை கைது செய்தனர்.
ஏற்கனவே கொல்கத்தாவில் பயிற்சி பெண் டாக்டர் மருத்துவமனை வளாகத்திற்குள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், ஓடும் பஸ்சில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த பாலியல் தொல்லை சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.