தொடர் கனமழையால் நீர்மட்டம் உயர்வால் கே.ஆர்.எஸ். அணையில் இருந்து எந்நேரமும் தண்ணீர் திறக்கப்படலாம்-கரையோர மக்கள் வெளியேற உத்தரவு
தொடர் கனமழையால் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருவதால் கே.ஆர்.எஸ். அணையில் இருந்து எந்நேரமும் தண்ணீர் திறக்கப்படலாம் என்றும், கரையோர மக்கள் வெளியேறவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மைசூரு: தொடர் கனமழையால் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருவதால் கே.ஆர்.எஸ். அணையில் இருந்து எந்நேரமும் தண்ணீர் திறக்கப்படலாம் என்றும், கரையோர மக்கள் வெளியேறவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
கே.ஆர்.எஸ். அணை
கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா கண்ணாம்பாடி கிராமத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே கிருஷ்ணராஜ சாகர் (கே.ஆர்.எஸ்.) அணை அமைந்துள்ளது. இந்த அணை தமிழ்நாடு, கர்நாடக மக்களின் உயிர்நாடியாக விளங்குகிறது. இந்த அணையின் நீர்பிடிப்பு பகுதியான குடகு மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக இடைவிடாது கனமழை கொட்டி வருகிறது.
இதன்காரணமாக கே.ஆர்.எஸ். அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. குடகில் இடைவிடாமல் கனமழை கொட்டி வருவதால் அணைக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன்காரணமாக கே.ஆர்.எஸ். அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. ஒரே நாளில் கே.ஆர்.எஸ். அணையின் நீர்மட்டம் 4 அடி உயர்ந்துள்ளது.
8 அடி மட்டுமே பாக்கி
124.80 அடி உயரம் கொண்ட கே.ஆர்.எஸ். அணையில் நேற்று முன்தினம் 112 அடி தண்ணீர் இருந்தது. நேற்று மாலை நிலவரப்படி அணையில் 116 அடி தண்ணீர் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 30 ஆயிரத்து 953 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 3,500 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
குடகில் தொடர்ந்து கனமழை பெய்வதால், கே.ஆர்.எஸ். அணைக்கு வரும் நீரின் அளவு இன்னும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கே.ஆர்.எஸ். அணை நிரம்ப இன்னும் 8 அடி மட்டுமே பாக்கி உள்ளது. நீர்வரத்து இதே அளவு தொடர்ந்து நீடித்தால் இன்னும் 2 அல்லது 3 நாட்களில் அணை நிரம்பி விடும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
எந்நேரமும் திறக்கலாம்
இந்த நிலையில் கே.ஆர்.எஸ். அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருவதால், அணையின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, அணையில் இருந்து தண்ணீர் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் காவிரி கரையோரத்தில் உள்ள மக்கள், தங்களின் உடைமைகள் மற்றும் கால்நடைகளுடன் வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து கே.ஆர்.எஸ். அணையின் முதன்மை என்ஜினீயர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கே.ஆர்.எஸ். அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டமும் வேகமாக உயர்ந்து வருகிறது. இதனால் அணையின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தண்ணீர் திறக்க முடிவு ெசய்துள்ளோம். இதனால், காவிரி கரையோரத்தில் இருக்கும் மக்கள் தங்கள் உடைமைகள் மற்றும் கால்நடைகளுடன் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும். அதிகாரிகள் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அணையின் முதன்மை என்ஜினீயர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளதால், கே.ஆர்.எஸ். அணையில் இருந்து எந்நேரமும் தண்ணீர் திறக்கப்படலாம் என தெரிகிறது.