கோலார் தங்கவயல் தொகுதியில் குமாரசாமி போட்டியிடுவார்
ஜனதா தளம் (எஸ்) கட்சி சார்பில் கோலார் தங்கவயல் தொகுதியில் குமாரசாமி போட்டியிடுவார் என்று மாவட்ட தலைவர் வெங்கட சிவா ரெட்டி தெரிவித்துள்ளார்.
கோலார் தங்கவயல்-
கோலார் மாவட்ட ஜனதா தளம் (எஸ்) கட்சியின் தலைவர் வெங்கட சிவா ரெட்டி, கோலார் தங்கவயலில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கர்நாடகத்தில் பிறந்த யாரும் எந்த தொகுதியில் வேண்டுமென்றாலும் போட்டியிடலாம். சாமுண்டீஸ்வரி, பாதாமி, ராமநகரில் மக்கள் ஆதரவு கிடைக்காமல் டி.கே.சிவக்குமார், சித்தராமையா கோலார் தங்கவயலில் போட்டியிடபோவதாக கூறி வருகின்றனர். இதற்கு காங்கிரசில் ஒற்றுமையின்மையே காரணம். அவர்களால் இந்த கோலார் தங்கவயல் தொகுதிக்கு எந்த வளர்ச்சி திட்டப்பணிகளும் நடைபெறவில்லை. ஆனால் ஜனதா தளம் (எஸ்) கட்சி ஆட்சியில் இருந்தபோது, கோலார் தங்கவயலில் பல வளர்ச்சி திட்டப்பணிகள் நடந்துள்ளது. இந்நிலையில் நாம் ஏன் குமாரசாமியை கோலாா் தங்கவயலில் நிறுத்த கூடாது. ஜனதா தளம் (எஸ்) சார்பில் குமாரசாமி வேட்பாளராக நிறுத்துவோம். மக்கள் அவருக்கு ஆதரவு அளிப்பார்கள். பொய்யான வாக்குறுதிகளை கூறி காங்கிரஸ் ஆட்சியை பிடித்துவிடலாம் என்று நினைக்கிறது. அதற்கு மக்கள் தங்க பாடம் புகட்டுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.