பொன் விளையும் பூமி இதுதானோ...! ஆந்திர விவசாயிக்கு அடித்த அதிர்ஷ்டம்


பொன் விளையும் பூமி இதுதானோ...!  ஆந்திர விவசாயிக்கு அடித்த அதிர்ஷ்டம்
x

ஆந்திராவில் விவசாயி ஒருவர் தனது விளைநிலத்தில் இருந்து கைப்பற்றிய 30 கேரட் வைரத்தை ரூ.2 கோடிக்கு விற்று விட்டதாக வெளியாகியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐதராபாத்,

வழக்கமாக ஜுன் 1ம் தேதியே தொடங்கும் தென்மேற்கு பருவமழை, இந்த வருடம் தாமதமாக துவங்குகிறது. எப்படியும் செப்டம்பர் மாதம் வரை மழை நீடிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் அரபிக்கடல் மற்றும் வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகின. அந்தவகையில், பல்வேறு மாநிலங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறி வருகின்றன. இதில் ஆந்திர பிரதேசமும் ஒன்றாகும். கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஜொன்னகிரி, துக்கிலி, மடிகேரா, பெகதிராய், பேராபலி, மஹாநந்தி மற்றும் மஹாதேவபுரம் கிராமப்பகுதிகளில் நல்ல மழை பெய்திருக்கிறது.

இந்நிலையில், ஆந்திர மாநிலம், கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஜொன்னகிரி, துக்கிலி, மடிகேரா, பெகதிராய், பேராபலி, மஹாநந்தி மற்றும் மஹாதேவபுரம் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள வயல் வெளிகளில், மழை பெய்த பின்னர் வைரக்கற்கள் தானாகவே வெளியே வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 2019-ஆம் ஆண்டு, விவசாயி ஒருவர் ரூ.60 லட்சம் மதிப்பிலான வைரத்தை உள்ளூர் வணிகரிடம் நல்ல தொகைக்கு விற்றதாக தகவல் வெளியானது. அதேபோல் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் கர்னூல் மாவட்ட விவசாயிகள் 2 விலையுயர்ந்த வைரக் கற்களை கண்டுபிடித்து நல்ல தொகைக்கு விற்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து, வைர கற்களை எடுப்பதற்காக, கர்னூல் மாவட்ட விவசாயிகள் அன்றாட வேலைகளை ஒதுக்கி விட்டு, வயல் வெளிகளில் தற்காலிக கூடாரங்கள் அமைத்து வைர கற்களை தேடி வருகின்றனர்.

இந்நிலையில், விவசாயி ஒருவர் தனது விளைநிலத்தில் 30 கேரட் வைரத்தை கண்டுபிடித்ததாகவும், அதனை அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள ஒரு வைர வியாபாரியிடம் ரூ.2 கோடிக்கு விற்றுவிட்டதாகவும் அப்பகுதியில் அரசல் புரசலாக பேசப்பட்டு வருகிறது. இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதெல்லாம் உண்மையா? புரளியா? என்றுகூட தெரியவில்லை என தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.


Next Story