சந்திர திரிகோண மலையில் பூத்து குலுங்கும் குறிஞ்சி பூக்கள்; பாதுகாக்க சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை
சந்திர திரிகோண மலையில் பூத்து குலுங்கும் குறிஞ்சி பூக்களை பாதுகாக்க சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
சிக்கமகளூரு;
சிக்கமகளூரு மாவட்டத்தில் சந்திர திரிகோண மலையில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சி பூக்கள் தோட்டம் உள்ளது. இங்கு கடந்த 15 நாட்களாக குறிஞ்சி பூக்கள் பூத்து குலுங்கி வருகிறது. இதனை காண்பதற்கு வெளியூர் மற்றும் தமிழகம், ஆந்திரா போன்ற வெளி மாநிலங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.
மேலும் சுற்றுலா பயணிகள் குறிஞ்சி பூக்களை தங்களது செல்போன் மற்றும் கேமராக்களில் புகைப்படம் எடுத்து வருகின்றனர். அப்போது சுற்றுலா பயணிகள் குறிஞ்சி பூக்களின் அருகில் அமர்ந்தும், அவைகளுக்கு இடையே நடந்தும் புகைப்படம் எடுக்கின்றனர். இதனால் செடிகள் சேதமடைகிறது.
இதனை கண்டித்து இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சிலர் மாவட்ட நிர்வாகத்திடம் நடவடிக்கை எடுக்கக்கோரி மனு அளித்துள்ளனர். அதில் அவர்கள், 'குறிஞ்சி பூக்கள் பூத்தால் 15 நாட்கள் மட்டுமே செடிகளில் இருக்கும். இதனால் சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுப்பது என்ற பெயரில் செடிகளை நாசப்படுத்தி வருகின்றனர். இதற்கு அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்' என கூறியிருந்தனர்.