லகிம்பூர் வன்முறை: மத்திய மந்திரியின் மகன் ஆஷிஸ் மிஸ்ரா ஜாமினில் விடுதலை
லகிம்பூர் வன்முறையில் 8 பேர் உயிரிழந்தனர்.
லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் லகிம்பூர் கேரி மாவட்டத்தில் 2021 அக்டோபர் 3-ம் தேதி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க மாநில துணை முதல்-மந்திரி கேசவ் பிரசாத் மவுரியா,மத்திய இணை மந்திரி அஜய் மிஸ்ரா மற்றும் அவரது மகன் ஆஷிஸ் மிஸ்ரா சென்றனர்.
அப்போது, வேளாண் பாதுகாப்பு சட்டத்தை ரத்து செய்யக்கோரி லக்கிம்பூரில் மத்திய மந்திரி சென்ற காரை இடைமறித்து விவசாயிகள் போராட்டம் நடத்தினர். அப்போது, மத்திய மந்திரி அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஸ் மிஸ்ரா பயணித்த கார் போராட்டம் நடத்திய விவசாயிகள் கூட்டத்திற்குள் புகுந்தது. இந்த சம்பவத்தில் 4 விவசாயிகள் உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து விவசாயிகள் - பாஜக ஆதரவாளர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் மொத்தம் 8 பேர் உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக தலைமறைவாக இருந்த உள்துறை இணை மந்திரி அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஸ் மிஸ்ரா ஏப்ரல் 24-ம் தேதி கோர்ட்டில் சரணடைந்தார். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். இந்த வழக்க்கு தொடர்பாக 13 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதனிடையே, கடந்த ஆண்டு பிப்ரவரி 10 ஆம் தேதி அலகாபாத் ஐகோர்ட்டு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டதால் ஆஷிஸ் மிஸ்ரா சிறையில் இருந்து வெளிவந்தார். பின்னர், இந்த ஜாமினுக்கு எதிராக உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவை கடந்த ஏப்ரல் மாதம் விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு ஆஷிஸ் மிஸ்ராவின் ஜாமீனை ரத்து செய்தது. பின்னர் அவர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.
சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஆஷிஸ் மிஸ்ரா சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் ஜாமின் மனு தாக்கல் செய்தார். அந்த ஜாமின் மனுவை கடந்த புதன்கிழமை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு ஆஷிஸ் மிஸ்ராவுக்கு இடைக்கால ஜாமின் வழங்கியது.
இந்நிலையில், சுப்ரீம் கோர்ட்டு ஜாமின் வழங்கிய நிலையில் 8 பேர் உயிரிழந்த லகிம்பூர் கேரி சம்பவத்தில் கைதாகி சிறையில் இருந்த மத்திய இணை மந்திரி அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஸ் மிஸ்ரா இன்று ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார்.