லட்சுமி ஹெப்பால்கர் இரட்டிப்பு மகிழ்ச்சி:மந்திரி பதவியுடன், பாட்டியும் ஆனார்


லட்சுமி ஹெப்பால்கர் இரட்டிப்பு மகிழ்ச்சி:மந்திரி பதவியுடன், பாட்டியும் ஆனார்
x

மந்திரி பதவி கிடைத்த நிலையில், மகனுக்கு பெண் குழந்தை பிறந்ததால் லட்சுமி ஹெப்பால்கர் இரட்டிப்பு மகிழ்ச்சி அடைந்துள்ளார்.

பெங்களூரு:-

மந்திரியாக பதவி ஏற்பு

கர்நாடக சட்டசபை தேர்தலில் பெலகாவி புறநகர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு லட்சுமி ஹெப்பால்கர் அபார வெற்றி பெற்றிருந்தார். லட்சுமி ஹெப்பால்கரை தோற்கடிக்க முன்னாள் மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். ஆனால் அவர் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார். லிங்காயத் சமூகத்தை சேர்ந்த லட்சுமி ஹெப்பால்கருக்கு மந்திரி பதவி கிடைக்கும் என்ற தகவல் வெளியானது.

மேலும் லிங்காயத் சமூகத்தை சேர்ந்தவர் என்பதுடன், பெண் என்ற அடிப்படையில் லட்சுமி ஹெப்பால்கருக்கு மந்திரி பதவி கிடைக்கும் என்று கூறப்பட்டது. அதன்படி, நேற்று முன்தினம் வெளியான பட்டியலில் லட்சுமி ஹெப்பால்கருக்கு மந்திரி பதவி கிடைத்துள்ளது. இதையடுத்து, கவர்னர் மாளிகையில் நேற்று நடந்த பதவி ஏற்பு விழாவில் லட்சுமி ஹெப்பால்கர் மந்திரியாக பதவி ஏற்றுக் கொண்டார். அவருக்கு கவர்னர் தாவர்சந்த் கெலாட் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

பாட்டியான லட்சுமி ஹெப்பால்கர்

மந்திரிசபையில் இடம் பெற்றுள்ள ஒரே பெண் மந்திரி லட்சுமி ஹெப்பால்கர் ஆவார். இந்த நிலையில், மந்திரி லட்சுமி ஹெப்பால்கருக்கு நேற்று இரட்டிப்பு மகிழ்ச்சி கிடைத்திருந்தது. அதாவது லட்சுமி ஹெப்பால்கருக்கு மைனால் ஹெப்பால்கர் என்ற மகன் உள்ளார். அவருக்கு திருமணமாகி கீதா என்ற மனைவி உள்ளார். தற்போது கீதா நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். பிரசவசத்திற்கு சிவமொக்கா மாவட்டத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் கீதா அனுமதிக்கப்பட்டு இருந்தார்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு கீதாவுக்கு பெண் குழந்தை பிறந்திருந்தது. அதாவது காங்கிரஸ் மேலிடம் அதிகாரப்பூர்வமான மந்திரிகளின் பட்டியலை வெளியிட்ட பின்பு, குழந்தை பிறந்திருந்தது. இதனால் மந்திரி பதவி கிடைத்த, அதே நேரத்தில் லட்சுமி ஹெப்பால்கர் பாட்டி ஆகி இரட்டிப்பு மகிழ்ச்சி அடைந்துள்ளார். தங்களது வீட்டிற்கு மகாலட்சுமியும், மந்திரியும் வந்திருப்பதாக லட்சுமி ஹெப்பால்கரின் குடும்பத்தினர் கொண்டாடி வருகின்றனர்.


Next Story