கடைசி வரிசையில் இருக்கை ஒதுக்கீடு; செங்கோட்டையில் ராகுல் காந்திக்கு அவமதிப்பா?
செங்கோட்டையில் ராகுல் காந்தி கடைசியில் இருந்து இரண்டாவது வரிசையில் அமர்ந்திருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.
புதுடெல்லி,
இந்தியாவின் 78-வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் இன்று பிரதமர் மோடி 11-வது முறையாக தேசிய கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார்.
அதே சமயம், 10 ஆண்டுகளுக்குப் பிறகு எதிர்க்கட்சி தலைவர் அந்தஸ்துடன் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி செங்கோட்டையில் நடைபெற்ற விழாவில் பங்கேற்றார். இந்த நிலையில், ராகுல் காந்திக்கு செங்கோட்டையில் பார்வையாளர்கள் பகுதியில் கடைசியில் இருந்து 2-வது வரிசையில் இருக்கை ஒதுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், இதற்கு காங்கிரஸ் ஆதரவாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கேரா 'எக்ஸ்' தளத்தில் பகிர்ந்த ரோஷன் ராய் என்பவரின் பதிவில், "காங்கிரஸ் ஆட்சியின்போது பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களுக்கு முன் வரிசையில் இடம் அளிக்கப்பட்டது, ஆனால், பா.ஜ.க. ஆட்சியில் எதிர்க்கட்சி தலைவருக்கு கடைசி இடம் கொடுக்கப்பட்டுள்ளது. இதுதான் இரு கட்சிகளுக்கு இடையேயான வேறுபாடு" என பதிவிடப்பட்டுள்ளது.
இருப்பினும், ராகுல் காந்தி செங்கோட்டையில் கடைசியில் இருந்து இரண்டாவது வரிசையில் அமர்ந்தது குறித்து மத்திய அரசு அல்லது காங்கிரஸ் தரப்பில் இருந்து இதுவரை எந்தவித விளக்கமும் அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.