பெங்களூருவில் 'ஹெலி டாக்சி' சேவை அறிமுகம் வருகிற 10-ந் தேதி தொடங்குகிறது
பெங்களூருவில் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஏச்.ஏ.எல். பகுதிக்கு ‘ஹெலி டாக்சி' சேவை வருகிற 10-ந் தேதி தொடங்கப்பட உள்ளது.
பெங்களூரு:
வாகன நெரிசல்
பெங்களூருவில் தற்போது பஸ் போக்குவரத்து, வாடகை கார்கள் போக்குவரத்து, மெட்ரோ ரெயில் போக்குவரத்து, புறநகர் ரெயில் போக்குவரத்து (தற்போது சில வழிகளில் மட்டும்) அமலில் உள்ளது. நகரில் ஒரு கோடி வாகனங்கள் ஓடுவதால் தினந்தோறும் வாகன நெரிசல் ஏற்படுகிறது.
இந்த வாகன நெரிசலில் மக்கள் சிக்கி திணறுகிறார்கள். 10 நிமிடங்களில் ஒரு இடத்திற்கு போய் சேர வேண்டிய இடத்திற்கு போக்குவரத்து நெரிசல் காரணமாக அரை மணி நேரத்திற்கு மேல் ஆகிறது. மழை உள்ளிட்ட சில நேரங்களில் அது ஒரு மணி நேரம் கூட ஆகிவிடும் நிலை உள்ளது.
விமான பயணிகள்
குறிப்பாக பெங்களூரு நகரின் மையப்பகுதியில் இருந்து தேவனஹள்ளியில் உள்ள சர்வதேச விமான நிலையத்திற்கு காரிலோ அல்லது பஸ்சிலோ செல்ல வேண்டுமென்றால் அதற்கு 2 மணி நேரம் ஆகிறது.
சில நேரங்களில் சாலையில் ஏதாவது விபத்து ஏற்பட்டு வாகன நெரிசல் உண்டானால் இன்னும் கூடுதல் நேரம் ஆகும் நிலையம் உள்ளது. அவ்வாறான நேரங்களில் விமானங்களுக்கு செல்கிறவர்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு விமான நிலையத்திற்கு செல்ல முடியாமல் விமானங்களை தவறவிடும் நிலையும் உள்ளது.
ஹெலிகாப்டர் டாக்சி
இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கத்தில் பெங்களூருவில் 'ஹெலி டாக்சி' அதாவது ஹெலிகாப்டர் டாக்சி அறிமுகம் செய்யப்படுகிறது. பிளேட் இந்தியா என்ற நிறுவனம், இந்த திட்டத்தை செயல்படுத்துவதாக கூறியுள்ளது. வருகிற 10-ந் தேதி இந்த ஹெலிகாப்டர் டாக்சி சேவை தொடங்கப்படுகிறது. முதல்கட்டமாக சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நகரின் மையப்பகுதியில் உள்ள எச்.ஏ.எல். விமான நிலையத்திற்கு இயக்கப்படுகிறது.
தினமும் 2 ஹெலிகாப்டர்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. ெலிகாப்டர் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 12 நிமிடங்களில் எச்.ஏ.எல். விமான நிலையத்திற்கு வந்தடையும். இதற்கு ஒருவருக்கு பயண கட்டணமாக ரூ.3,250 நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்த ஹெலிகாப்டர் டாக்சி சேவை தினமும் காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 4.15 மணி வரை வழங்கப்படும்.
கம்ப்யூட்டர் என்ஜினீயர்கள்
bஇந்த திட்டத்தால் எச்.ஏ.எல். இந்திராநகர், கோரமங்களா, சர்ஜாப்புரா, மகாதேவபுரா மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியாற்றும் கம்ப்யூட்டர் என்ஜினீயர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று கருதப்படுகிறது. இந்த ஹெலி டாக்சிக்கு மத்திய-மாநில அரசுகள் மற்றும் பெங்களூரு மாநகராட்சி ஒப்புதல் வழங்கியுள்ளன.