கர்நாடகத்தில் தலைவர்கள் அனல் பறக்கும் பிரசாரம்


கர்நாடகத்தில் தலைவர்கள் அனல் பறக்கும் பிரசாரம்
x

சட்டசபை தேர்தலையொட்டி கர்நாடகத்தில் தலைவர்கள் நேற்று அனல் பறக்கும் பிரசாரம் மேற்கொண்டனர்.

பெங்களூரு:-

சட்டசபை தேர்தல்

சட்டசபை தேர்தலையொட்டி கர்நாடகத்தில் தேசிய தலைவர்கள், பிற மாநிலங்களின் தலைவர்கள் என பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் சுறுசுறுப்பாகவும், விறுவிறுப்பாகவும் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி. நட்டா உள்ளிட்ட தலைவர்களும், காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, தற்போதைய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்டோரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

பிரதமர் நரேந்திர மோடி

இதுதவிர ஜனதா தளம்(எஸ்) கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் தேசிய தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவேகவுடா, முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி உள்ளிட்டோரும் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடி கர்நாடகத்துக்கு வந்தார். அப்போது கோலார், ஹாசன், ராமநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் பிரசாரம் மேற்கொண்டார். பெங்களூரு, மைசூரு ஆகிய மாவட்டங்களில் திறந்த வாகனத்தில் பிரமாண்ட ஊர்வலம் நடத்தி பா.ஜனதா வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.

2 நாட்களில் 6 பொதுக்கூட்டங்கள், 2 பிரமாண்ட பேரணிகளில் கலந்து கொண்ட பிரதமர் மோடி நேற்று மீண்டும் கர்நாடகம் வந்தார். அவர் நேற்று காலையில் சித்ரதுர்காவில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். இதற்காக காலை 10.25 மணிக்கு சித்ரதுர்காவுக்கு வந்த பிரதமர் மோடி காலை 11 மணிக்கு சல்லகெரேவுக்கு சென்று பா.ஜனதாவின் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். பின்னர் மதியம் 1 மணிக்கு விஜயாப்புரா மாவட்டம் ஒசப்பேட்டேவில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்திலும், மதியம் 2.45 மணிக்கு ராய்ச்சூர் மாவட்டம் சிந்தனூரில் நடந்த பொதுக்கூட்டத்திலும் கலந்து கொண்டு பேசினார். மாலை 5 மணிக்கு கலபுரகியில் திறந்த வாகனத்தில் ஊர்வலம் நடத்தினார். இது அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் சொந்த ஊர் ஆகும். அங்கு சுமார் ஒரு மணி நேரம் திறந்த வாகனத்தில் ஊர்வலம் நடத்தி பா.ஜனதா வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரதமர் மோடி வாக்கு சேகரித்தார். அதையடுத்து நேற்று இரவு கலபுரகியிலேயே பிரதமர் மோடி தங்கினார்.

உள்துறை மந்திரி அமித்ஷா

இதுபோல் நேற்று உள்துறை மந்திரி அமித்ஷா சாம்ராஜ்நகர், மைசூரு, பெங்களூருவில் பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு பேசி பா.ஜனதா வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார். அவர் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் ஹனூர் மற்றும் கொள்ளேகாலிலும் நடந்த பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். ஹனூரில் ஆர்.எஸ்.தொட்டி அருகே உள்ள மைதானத்திலும், கொள்ளேகால் தொகுதிக்கு உட்பட்ட சந்தேமரஹள்ளி டவுனிலும் நடந்த பிரசார கூட்டத்தில் பேசி ஆதரவு திரட்டினார். இதில் கொள்ளேகால் தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து விலகிய முன்னாள் மந்திரி என்.மகேசுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதையடுத்து அவர் மைசூரு மாவட்டத்திற்கு உட்பட்ட வருணா தொகுதியில் பிரசாரம் மேற்கொண்டு பொதுக்கூட்டத்தில் பேசினார். இந்த சந்தர்ப்பத்தில் அமித்ஷாவுடன் முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா, சீனிவாஸ் பிரசாத் எம்.பி. ஆகியோர் உடனிருந்தனர். அதையடுத்து அவர் பெங்களூருவில் திறந்த வாகனத்தில் ஊர்வலம் மேற்கொண்டார். அவர் பெங்களூருவில் ஆடுகோடி சிக்னலில் இருந்து ஒசூரு சாலையில் உள்ள டோட்டல் மால் வரை ஊர்வலம் மேற்கொண்டார். இந்த சந்தர்ப்பத்தில் அவ்வழியாக வாகன போக்குவரத்து தடை விதிக்கப்பட்டு இருந்தது.

ராகுல்காந்தி

இதுபோல் நேற்று அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கர்நாடகத்தின் எண்ணெய் நகரமான தாவணகெரேவில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார். அவர் தாவணகெரே மாவட்டம் ஹரிஹரா டவுனில் உள்ள காந்தி மைதானத்தில் நடந்த காங்கிரஸ் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். பின்னர் அவர் சிக்கமகளூருவில் திறந்த வாகனத்தில் ஊர்வலம் மேற்கொண்டு காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார். கே.இ.பி. சர்க்கிள் முதல் ஆஜாத் பூங்கா சர்க்கிள் வரை இந்த ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்தின் முடிவில் ராகுல்காந்தி காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பேசினார். மேலும் அவர் சிவமொக்கா மாவட்டம் தீர்த்தஹள்ளியில் நடந்த காங்கிரஸ் பிரசார கூட்டத்திலும் கலந்து கொண்டு பேசினார்.

பிரியங்கா காந்தி

இதுபோல் மண்டியா மாவட்டத்திலும், சிக்பள்ளாப்பூர் மாவட்டத்திலும் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் தங்கள் கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரித்தார். சிக்பள்ளாப்பூர் மாவட்டம் சிந்தாமணி, பெங்களூரு புறநகர் மாவட்டம் ஒசக்கோட்டை, பெங்களூரு நகர மாவட்டம் சி.வி.ராமன்நகர் ஆகிய இடங்களில் திறந்த வாகனத்தில் ஊர்வலமும் நடத்தினார். இதில் மண்டியா மாவட்டத்தில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் பிரியங்கா காந்தியுடன், பிரபல நடிகை ரம்யாவும் கலந்து கொண்டு பேசி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுபோல் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பீதர் மாவட்டத்தில் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவாக ஓட்டு சேகரித்தார். அவர் பால்கி, உம்னாபாத், பசவகல்யாண் ஆகிய தொகுதிகளில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசி ஆதரவு திரட்டினார்.

கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் டி.கே.சிவக்குமார் கோலார் மாவட்டம் முல்பாகல் தொகுதியில் பிரசாரம் மேற்கொண்டார்.

தேவேகவுடா

இதுபோல் ஜனதா தளம்(எஸ்) கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முன்னாள் பிரதமர் தேவேகவுடா சிக்கநாயக்கனஹள்ளி மற்றும் குப்பி பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார். இந்த சந்தர்ப்பத்தில் தேவேகவுடாவுடன் சிக்கநாயக்கனஹள்ளி தொகுதி ஜனதா தளம்(எஸ்) கட்சி வேட்பாளர் சுரேஷ் பாபு, குப்பி தொகுதி வேட்பாளர் நாகராஜு ஆகியோர் இருந்தனர்.

இவர்களைத் தவிர ராமநகர் தொகுதியில் நடிகையும், நாடாளுமன்ற உறுப்பினருமான சுமலதா பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து வாக்குசேகரித்தார். எம்.பி. ஆன பிறகு ராமநகர் மாவட்டத்திற்கு சுமலதா வருகை தருவது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது. இதுபோல் கொப்பல் மாவட்டத்தில் இரு முன்னாள் முதல்-மந்திரிகள் நேற்று பிரசாரம் மேற்கொண்டனர். அதாவது காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து சித்தராமையாவும், ஜனதா தளம்(எஸ்) வேட்பாளர்களை ஆதரித்து குமாரசாமியும் பிரசாரம் செய்தனர்.

அண்ணாமலை

மேலும் தார்வார் மாவட்டம் குந்துகோல், நவலகுந்து, கதக் மாவட்டம் சிரஹட்டி, ஹானகல் ஆகிய தொகுதிகளில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையும், மைசூரு மாவட்டம் வருணா, சாம்ராஜ்நகர் மாவட்டத்திற்கு உட்பட்ட ஹனூர், கொள்ளேகால், குண்டலுபேட்டை, சாம்ராஜ்நகர் ஆகிய தொகுதிகளில் எடியூரப்பாவும், பெங்களூரு சர்வக்ஞநகர், சிவாஜிநகர், மகாலட்சுமி லே-அவுட் ஆகிய பகுதிகளில் தமிழக பா.ஜனதா தலைவரும், கர்நாடக பா.ஜனதா தேர்தல் இணை பொறுப்பாளருமான அண்ணாமலையும் பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தனர்.


Next Story