உண்மைகள் குறைவு, அலங்கார நடை அதிகம்; பிரதமர் மோடிக்கான கார்கே கடிதம் பற்றி பா.ஜ.க. சாடல்
பிரதமர் மோடிக்கு கார்கே எழுதிய கடிதத்தில், அலங்கார நடை அதிகம் என்றும் உண்மைகள் குறைவு என்றும் பா.ஜ.க. எம்.பி.க்கள் பதில் கடிதத்தில் தெரிவித்து உள்ளனர்.
பெங்களூரு,
ஒடிசாவில் 3 ரெயில்கள் அடுத்தடுத்து விபத்தில் சிக்கிய சம்பவத்தில் 288 பேர் உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே ரெயில்வேயின் தவறான நிர்வாகம் என 10 விசயங்களை குறிப்பிட்டு பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இந்த விபத்தில் உண்மையான காரணங்களை வெளி கொண்டு வரும்படி அவர் வலியுறுத்தி உள்ளார். இந்நிலையில், பா.ஜ.க.வின் முன்னாள் முதல்-மந்திரி சதானந்த கவுடா, தேஜஸ்வி சூர்யா, பி.சி. மோகன் மற்றும் முனிசாமி உள்ளிட்ட 4 பேர் கார்கேவின் கடிதத்திற்கு பதில் கடிதம் எழுதியுள்ளனர்.
அதில், மதிப்புமிகு பிரதமர் மோடிக்கு நீங்கள் எழுதிய உங்களது சமீபத்திய கடிதத்தில், அதிக அலங்கார நடையும், உண்மைகள் குறைவாகவும் உள்ளன என நாங்கள் கண்டறிந்து உள்ளோம்.
ரெயில்வேயின் ஒரு முன்னாள் மந்திரியாக உங்களிடம் இருந்து, சூழ்நிலையை ஆழ்ந்த மற்றும் புரிந்து கொள்ளுதலுடன் பகுத்தறியும் திறன் இருக்கும் என ஒருவர் எதிர்பார்க்க கூடும்.
ஏனெனில், 2004 மற்றும் 2014 ஆகிய ஆண்டுகளுக்கு இடையே நீங்கள் ரெயில்வே மந்திரியாக இருந்துள்ளீர்கள். ஆனால், எங்களை தொடர்பு கொண்ட உங்களது சமீபத்திய கடிதம் வேறு வகையாக உள்ளது.
நீங்கள் குறிப்பிட்டது போன்று மைசூரில் எந்தவித மோதலும் இல்லை. வாட்ஸ்அப் பல்கலை கழகத்தில் இருந்து உண்மைகளை பெற்று பிரதமருக்கு கடிதம் எழுதியது உங்களை போன்ற ஒரு தலைவருக்கு பொருத்தமல்ல.
வாட்ஸ்அப் பல்கலை கழகத்தின் துணைவேந்தராக, நீங்கள் பொய்யான செய்திகளை உண்மைகள் போன்று தெரிவிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு உள்ளீர்கள் என அந்த கடிதத்தில் பா.ஜ.க.வினர் தெரிவித்து உள்ளனர்.