ஆண்டுக்கு 30 பேர் சாவு: பெங்களூரு நகரில் உயிரை காவு வாங்கும் சாலை பள்ளங்கள்...!


ஆண்டுக்கு 30 பேர் சாவு:  பெங்களூரு நகரில் உயிரை  காவு வாங்கும் சாலை பள்ளங்கள்...!
x

கர்நாடக தலைநகரான பெங்களூரு பூங்கா நகரம், தகவல் தொழில்நுட்ப நகரம் உள்ளிட்ட பல்வேறு புனைப்பெயர்களால் அழைக்கப்பட்டு வருகிறது.

பெங்களூரு:

கர்நாடக ஐகோர்ட்டு எச்சரிக்கை

பெங்களூரு நகரில் வேலை வாய்ப்புகள் அதிகம் உள்ளதால் அண்டை மாநிலங்களை சேர்ந்தவர்களும் பெங்களூருவில் வசித்து வருகின்றனர். இதனால் நகரில் மக்கள் தொகை ஒரு கோடியை தாண்டி சென்று விட்டது என்று கூறப்படுகிறது. மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப நகரில் வாகனங்களின் எண்ணிக்கையும் தினமும் அதிகரித்து கொண்டே செல்கிறது.

இதனால் நகரில் உள்ள அனைத்து சாலைகளிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் பெங்களூரு வாகன ஓட்டிகளுக்கு சாலை பள்ளம் தற்போது பெரிய தலைவலியாக உள்ளது. அதாவது நகரில் உள்ள அனைத்து முக்கிய சாலைகள், வெளிவட்ட சாலைகள், தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட சாலைகளில் பாகுபாடின்றி பள்ளம் விழுந்து உள்ளது.

இளம்பெண் உயிர் தப்பினார்

ஒரு சில இடங்களில் சாலைகள் அரித்து உள்ளது. இதனால் சமீபகாலமாக அடிக்கடி விபத்துகள் அரங்கேறி வருகின்றன.

இதன்காரணமாக உயிரிழப்புகளும் நடந்து வருகின்றன. சாலை பள்ளங்களை மூட மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கர்நாடக ஐகோர்ட்டு எச்சரிக்கை விடுத்தும் சாலை பள்ளங்களை மூட மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் பொதுமக்கள் சார்பில் குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பெங்களூரு கல்யாண்நகர் பகுதியில் உள்ள வெளிவட்ட சாலையில் ஒரு இளம்பெண் ஸ்கூட்டரில் சென்று கொண்டு இருந்தார். அப்போது ஸ்கூட்டர் சாலை பள்ளத்தில் ஏறி, இறங்கியது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த ஸ்கூட்டரில் இருந்து இளம்பெண் தவறி விழுந்தார். ஆனால் ஹெல்மெட் அணிந்து இருந்ததாலும், பின்னால் வாகனங்கள் வராததாலும் அந்த இளம்பெண் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

ஆண்டுக்கு 30 பேர் சாவு

இளம்பெண் ஸ்கூட்டரில் இருந்து தவறி விழுந்த வீடியோ வைரலாகி இருந்தது. அந்த வீடியோவை பார்த்தவர்கள் வெளிவட்ட சாலை பள்ளத்தை மூட மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து இருந்தனர். ஆனால் அந்த பள்ளத்தில் வெறும் மணலை மட்டும் போட்டு மாநகராட்சி அதிகாரிகள் மூடி இருந்தனர். ஆனால் நேற்று பெய்த மழையில் அந்த மண் கரைந்து சென்றது.

இதனால் மாநகராட்சி மீது வாகன ஓட்டிகள் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளனர். இது ஒரு புறம் இருக்க பெங்களூருவில் சாலை பள்ளங்களால் ஏற்படும் விபத்துகளில் சிக்கி ஆண்டுக்கு 30 பேர் உயிரிழப்பதாக அதிர்ச்சி தகவலும் வெளியாகி உள்ளது. இதனை மாநகராட்சி அதிகாரிகளும் ஒப்புக்கொண்டு உள்ளனர். சாலை பள்ளங்களை மூடும் பணி தொடர்ந்து நடந்து வருவதாகவும், சாலை பள்ளங்களை கண்டறிந்து மூடும் பணி தங்களுக்கு சவாலாக இருப்பதாகவும் மாநகராட்சி அதிகாரிகள் கூறியுள்ளனர். எது எப்படியோ சாலை பள்ளங்களால் உயிரிழப்புகள் ஏற்படாமல் இருந்தால் சரி தான் என்று வாகன ஓட்டிகள் கூறி வருகின்றனர்.


Next Story