புற்றுநோய் பாதிப்புக்கு வாழ்க்கை முறை, உணவு பழக்கம் முக்கிய காரணம்


புற்றுநோய் பாதிப்புக்கு வாழ்க்கை முறை, உணவு பழக்கம் முக்கிய காரணம்
x

புற்றுநோய் பாதிப்புக்கு வாழ்க்கை முறை, உணவு பழக்கம் முக்கிய காரணம் என்று சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் தெரிவித்துள்ளார்.

பெங்களூரு:-

உலக புற்றுநோய் விழிப்புணர்வு தினத்தையொட்டி விழிப்புணர்வு ஊர்வலம் தொடக்க விழா பெங்களூரு விதான சவுதாவில் காந்தி சிலை முன்பு நடைபெற்றது. இதில் சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் கலந்து கொண்டு ஊர்வலத்தை தொடங்கி வைத்து பேசியதாவது:-

கர்நாடகத்தில் புற்றுநோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது. புற்றுநோய் பாதிப்பு உள்ளவா்களில் 10 சதவீதம் பேருக்கு நுரையீரல் புற்றுநோயும், வயிற்று புற்றுநோய் 7 சதவீதம் பேருக்கும், கர்ப்பப்பை புற்றுநோய் 12 சதவீதம் பேருக்கும் உள்ளது. புற்றுநோய் பாதிப்பு ஏற்படுவதற்கு நமது வாழ்க்கை முறை, உணவு பழக்கம் முக்கிய காரணம் ஆகும். பெண்களுக்கு புற்றுநோய் பாதிப்பு அதிகம் ஏற்படுகிறது.

பழங்கள், காய்கறிகள் குறைந்த அளவு சாப்பிடுதல், உடல் குறைபாடுகள், உடற்பயிற்சி குறைவாக செய்தல், புகையிலை பயன்பாடு மற்றும் மது அருந்துதல் போன்றவை புற்றுநோய் பாதிப்புக்கு முக்கிய காரணங்கள் ஆகும். காற்று மாசு, கதிர்வீச்சு போன்றவற்றாலும் புற்றுநோய் பாதிப்பு ஏற்படுகிறது. புற்றுநோயை விரைவாக கண்டறிவதால் அவற்றை முழுமையாக குணப்படுத்த முடியும்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மோசமான நிலையில் உள்ளவர்களுக்கு உதவி செய்ய மத்திய அரசு ஒரு திட்டம் கொண்டு வந்துள்ளது. அதன்படி அவர்களுக்கு தேவையான உதவிகள் வழங்கப்படும். 80 சதவீத புற்றுநோயாளிகளுக்கு வலி நிவாரண சிகிச்சை தேவைப்படுகிறது. மற்றவர்களுக்கு மாத்திரைகள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இவ்வாறு சுதாகர் கூறினார்.


Next Story