டெல்லியில் நாளை முதல் மதுவுக்கு தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு


டெல்லியில் நாளை முதல் மதுவுக்கு தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு
x

டெல்லியில் நாளை முதல் மதுவுக்கு தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

புதுடெல்லி,

புதுடெல்லி, டெல்லியில் புதிய மதுக் கொள்கை கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி சில்லறை மது பானக் கடைகளை இனி அரசு நடத்துவதில்லை என்ற முடிவெடுக்கப்பட்டு மது பான விற்பனை செய்வதற்கான உரிமம் தனியாருக்கு வழங்கப்பட்டது. இந்த கொள்கையின் கீழ் 850 மதுபான கடைகளை திறக்க தனியாருக்கு அனுமதியும் வழங்கப்பட்டது.

அந்த மதுக் கொள்கை இந்த ஆண்டு மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த நிலையில் இரண்டு முறை மது கொள்கையை நீட்டிக்கப்பட்டது. தற்போது நடைமுறையில் உள்ள புது மதுக் கொள்கை இன்றுடன் நிறைவடைகிறது. இதற்கிடையே புதிய மதுபான கொள்கையில் விதிமுறை மீறல் நடைபெற்ற தொடர்பான குற்றச்சாட்டு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு டெல்லி துணை நிலை கவர்னர் உத்தரவிட்டிருந்தார்.

இத்தகைய சூழலில் புதிய மதுக் கொள்கையை கைவிட அரசு முடிவு செய்திருப்பதாக தெரிவித்த டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிஸோடியா 2022-23 ம் ஆண்டுக்கான மதுக் கொள்கை இறுதி செய்யப்படும் வரை பழைய மதுக் கொள்கையே கடைபிடிக்கப்படும் என தெரிவித்துள்ளார். பழைய மது கொள்கையின்படி சில்லறை மதுபான கடைகளை அரசே நடத்தும்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை(1-ந்தேதி) முதல் டெல்லியில் தனியார் மது விற்பனை கடைகள் அனைத்தும் மூடப்படுகிறது. இதனால் தங்களிடம் இருக்கும் மதுபாட்டில்களை முழுவதுமாக விற்பனை செய்ய தனியார் மதுக்கடைகள் ஒரு பாட்டில் சரக்கு வாங்குபவர்களுக்கு 2 பாட்டில் மது இலவசம் என்ற அறிவிப்பை அதிரடியாக நேற்று வெளியிட்டது. இதையடுத்து மது பிரியர்கள் போட்டி போட்டு கொண்டு பிரபலமான ஸ்டார் சிட்டி, மால் உள்ளிட்ட மது விற்பனை கடைகள் முன்பு திரண்டார்கள். இதனால் மது கடைகள் முன்பு கடுமையாக கூட்டம் அலை மோதியது.

அவர்கள் தங்களுக்கு பிடித்தமான சரக்கு பாட்டில்களை வாங்கி சென்றனர். மதுபிரியர்கள் குறிப்பிட்ட சில மதுபான வகைகளை வாங்கியதால் விரைவாக அந்த மதுபாட்டில்கள் விற்று தீர்ந்தது. அதுவும் குறிப்பாக பீர் வகைகள் அனைத்தும் சில மணி நேரங்களில் விற்று காலியானது. இதையடுத்து பலர் மதுபாட்டில்கள் கிடைக்காததால் நொய்டா, காஜியாபாத் என அண்டை மாநிலத்திற்கு படையெடுக்கத் தொடங்கினர்.

பழைய மது கொள்கையின்படி சில்லறை மதுபான கடைகளை அரசே நடத்தும் என்ற அடிப்படையில் அரசு புதிய கடைகள் திறக்க பல நாட்கள் ஆகும் என்பதால் நாளை முதல் டெல்லியில் மது பற்றாக்குறை மற்றும் குழப்பம் உருவாகக்கூடிய வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.


Next Story