லோக் அயுக்தா அதிகாரிகள் என பொய் கூறி தாசில்தாரிடம் பணம் பறிக்க முயற்சி
சிக்பள்ளாப்பூரில், லோக் அயுக்தா அதிகாரி என பொய் கூறி 2 பேர், தாசில்தாரிடம் பணம் பறிக்க முயன்றனர். தப்பி ஓடிய 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகாறார்கள்.
கோலார் தங்கவயல்:
போலி லோக் அயுக்தா அதிகாரிகள்
சிக்பள்ளாப்பூர் நகரில் உள்ள தாலுகா அலுவலகத்தில் தாசில்தாராக பணியாற்றி வருபவர் கணபதி சாஸ்திரி. இந்த நிலையில் நேற்று காலை தாலுகா அலுவலகத்திற்கு டிப்-டாப்பாக உடை அணிந்து 2 பேர் வந்துள்ளனர். அவர்கள் நேராக ஆவணங்கள் கையாளும் ஊழியரிடம் சென்று ஆவணங்களை சரிபார்க்கும் பிரிவு எங்கு உள்ளது என்று கேட்டுள்ளனர். அப்போது ஒரு ஊழியர் எதிற்காக கேட்கிறீர்கள். உங்களுக்கு என்னவேண்டும் என்று கேட்டுள்ளார். இதற்கு அவர்கள் 2 பேரும் நாங்கள் லோக் ஆயக்தா அதிகாரிகள் என்றும், ஆவணங்களை கைப்பற்றி ஆய்வு செய்ய வந்துள்ளோம் என்று தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து அலுவலக ஊழியர், தாசில்தாரிடம் 2 பேரை அழைத்துச் சென்றுள்ளார். அப்போது அவர்கள் தாசில்தார் கணபதி சாஸ்திரியிடம், லோக் அயுக்தா அதிகாரிகள் என்றும், ஆவணங்களை சோதனை செய்ய உயர் அதிகாரிகள் வாய்மொழி உத்தரவால் வந்துள்ளதாக தெரிவித்தனர்.
வலைவீச்சு
இதில் சந்தேகமடைந்த தாசில்தார் கணபதி சாஸ்திரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் தகவல் கூறுகிறேன் என்று கூறி செல்போனை எடுத்துள்ளார். இதனால் போலீசுக்கு பயந்த 2 பேரும் அங்கிருந்து தப்பி ஓடினர்.
அப்போது தான் அவர்கள் 2 பேரும் போலி லோக் அயுக்தா அதிகாரிகள் என்பதும், பணம் கொள்ளையடிக்க திட்டமிட்டு வந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து சிக்பள்ளாப்பூர் டவுன் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் தாலுகா அலுவலகத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் போலி லோக் அயுக்தா அதிகாரிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.