பொய் சொல்வது பா.ஜனதாவின் கலாசாரம்; சித்தராமையா கடும் தாக்கு
பொய் சொல்வது பா.ஜனதாவின் கலாசாரம் என்று சித்தராமையா கூறினார்.
மங்களூரு:
பா.ஜனதாவின் கலாசாரம்
உடுப்பியில் காங்கிரஸ் சார்பில் நடந்த பஸ் யாத்திரையில் கலந்துகொள்வதற்காக சித்தராமையா வந்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
கர்நாடகத்தின் கடலோர பகுதி இந்துத்வாவின் ஆய்வுக்கூடம். பொய் சொல்வது பா.ஜனதாவின் கலாசாரம். பயங்கரவாதத்தை நாங்கள் எப்போதும் எதிர்க்கிறோம். பயங்கரவாதிகள் கடுமையான தண்டிக்கப்பட வேண்டும். இந்துத்வா என்ற பெயரில் பொய் சொல்பவர்களையும், மதவாதத்தை முன்வைப்பவர்களையும் பார்த்தால் கோபம் வருகிறது. இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர் யாராக இருந்தாலும் நாங்கள் அவர்களை நேசிக்கிறோம். எங்களுக்கு அனைவரும் சமம் தான்.
இந்துவும், இந்துத்வாவும் முற்றிலும் வேறுபட்டவை. இந்துத்வா வார்த்தையை கண்டுபிடித்தவர் சாவர்க்கர்.
பா.ஜனதாவுக்கு வளர்ச்சியில் நம்பிக்கை இல்லை. வளர்ச்சி பற்றி பேச வேண்டாம், லவ் ஜிகாத் பற்றி மட்டுமே பேச வேண்டும் என்று நளின்குமார் கட்டீல் கூறி உள்ளார். ஏழை மக்களின் வளர்ச்சியில் பா.ஜனதாவுக்கு அக்கறை இல்லை. பா.ஜனதா ஆட்சியில் இருந்தால் கடலோர பகுதி மட்டுமின்றி கர்நாடகம், ஏன் இந்தியா முழுவதும் வளர்ச்சி அடையாது. பா.ஜனதாவின் மனநிலையை மக்கள் அறிந்துள்ளனர்.
100 முறை வந்தாலும்...
மோடி இந்தியாவின் பிரதமர். அவா் எப்போது வேண்டுமானாலும் கர்நாடகத்தில் சுற்றுப்பயணம் செய்யலாம். ஆனால் அவர் பா.ஜனதாவை கர்நாடகத்தில் மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வருவோம் என்று சொன்னால் அது சாத்தியமற்றது. மோடி, அமித்ஷா 100 முறை வந்தாலும் பா.ஜனதாவை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வர முடியாது. பா.ஜனதாவால் மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர்.
மேற்கு வங்களாத்திலும் மோடியும், அமித்ஷாவும் தொடர்ந்து பிரசாரம் செய்தனர். அங்கு அவர்களுக்கு என்ன ஆனது. அதே கதி தான் கர்நாடகத்திலும் ஏற்படும்.
சட்டசபை தேர்தலில் கோலாரில் போட்டியிட முடிவு செய்துள்ளேன். ஆனால் கட்சி மேலிடம் முடிவே இறுதியானது. கர்நாடகத்தில் 130 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெறும். கடந்த சட்டசபை தேர்தலில் உடுப்பியில் ஒரு இடங்களில் கூட காங்கிரஸ் வெற்றி பெறவில்லை. இந்த முறை 3 தொகுதிகளில் நாங்கள் வெற்றி பெறுவோம். தட்சிண கன்னடாவில் உள்ள 8 தொகுதிகளில் குறைந்தது 5 தொகுதிகளில் வெற்றி பெறுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.