மீட்கப்பட்ட 15 மாலுமிகள் சொந்த நாட்டுக்கு விரைவில் அனுப்பி வைப்பு- மங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர்
நடுக்கடலில் பழுதான சிரியா சரக்கு கப்பலில் இருந்து மீட்கப்பட்ட 15 மாலுமிகள் சொந்த நாட்டுக்கு விரைவில் அனுப்பி வைக்கப்பட உள்ளதாக மங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் சசிக்குமார் தெரிவித்துள்ளார்.
மங்களூரு: நடுக்கடலில் பழுதான சிரியா சரக்கு கப்பலில் இருந்து மீட்கப்பட்ட 15 மாலுமிகள் சொந்த நாட்டுக்கு விரைவில் அனுப்பி வைக்கப்பட உள்ளதாக மங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் சசிக்குமார் தெரிவித்துள்ளார்.
நடுக்கடலில் பழுதான சரக்கு கப்பல்
மலேசியாவில் இருந்து 8 ஆயிரம் டன் சரக்குகளுடன் 'எம்.வி.பிரின்ஸ்' என்ற சிரியாவை சேர்ந்த சரக்கு கப்பல் லெபனான் நாட்டை நோக்கி சென்று கொண்டிருந்தது. இதில் சிரியாவை சேர்ந்த 15 மாலுமிகள் பயணித்தனர். அந்த கப்பல் தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு புதிய கப்பல் துறைமுகம் அருகே அரபிக்கடலில் சென்று கொண்டிருந்தபோது திடீரென்று பழுதானது. இதைதொடர்ந்து கப்பல் தரைதட்டி உள்ளே தண்ணீர் புகுந்தது. இதனால் மேற்கொண்டு பயணத்தை தொடர முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து புதிய மங்களூரு துறைமுகத்துக்குள் நுைழய அனுமதி கேட்டனர். ஆனால் அதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.
15 மாலுமிகள் மீட்பு
இதனால் புதிய மங்களூரு கப்பல் துறைமுகம் அருகே ஒரு கடல் மைல் தொலைவில் கப்பல் தரைதட்டி மூழ்க ஆரம்பித்தது. இதன்காரணமாக கப்பலில் இருந்த 15 மாலுமிகளும் சிக்கி தவித்தனர். இதுபற்றி தகவல் அறிந்த கடலோர காவல்படையினர் 2 மீட்பு கப்பல்கள் மூலம் கடலுக்குள் சென்று 15 மாலுமிகளையும் மீட்டு கரைக்கு கொண்டுவந்தனர்.
இதையடுத்து மீட்கப்பட்ட 15 மாலுமிகளையும் கடலோர காவல் படையினர் தங்களது கட்டுப்பாட்டில் காப்பகத்தில் சேர்த்தனர். மேலும் கப்பலை கயிறுகட்டி நங்கூரமிட்டு நிற்கவைத்தனர்.
விரைவில் அனுப்பி வைப்பு
இதுதொடர்பாக மங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் சசிக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நடுக்கடலில் பழுதான சிரியா கப்பலில் சிக்கி தவித்த 15 மாலுமிகளும் பத்திரமாக மீட்டு காப்பகத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர்.இதையடுத்து அவர்கள், பனம்பூர் போலீஸ் வசம் ஒப்படைக்கப்படுவார்கள். இதைதொடர்ந்து பெங்களூரு நெலமங்களாவில் உள்ள வெளிநாட்டினர் கண்டறியும் மையத்திற்கு மாற்றப்பட்டு அங்கிருந்து குடியேற்ற பணியகத்தின் அனுமதி பெற்று அவர்களின் நாட்டின் தூதரகம் மூலம் விரைவில் அனுப்பி வைக்கப்படுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.