மத்திய பிரதேசம்: 296 ஜோடிக்கு அரசு வழங்கிய ஒப்பனை பொருட்களில் ஆணுறைகள்; பா.ஜ.க.வை சாடிய காங்கிரஸ்
மத்திய பிரதேசத்தில் 296 ஜோடிக்கு அரசு வழங்கிய ஒப்பனை பொருட்களுக்கான பெட்டியில் ஆணுறைகள், கர்ப்ப தடை மருந்துகள் இருந்ததற்கு பா.ஜ.க.வை காங்கிரஸ் கடுமையாக சாடியுள்ளது.
போபால்,
மத்திய பிரதேசத்தின் ஜபுவா மாவட்டத்தில் தண்டலம் பகுதியில், முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகானின் முக்கிய மந்திரி கன்யா விவாகம் மற்றும் நிக்கா யோஜனா திட்டத்தின் கீழ் அரசு சார்பில் பெரிய அளவில் நேற்று திருமண நிகழ்ச்சி நடந்தது.
இதில், பொருளாதாரத்தில் வசதி குறைந்த பின்னணி கொண்ட 296 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. இதில், புதுமண தம்பதிகளுக்காக அரசு வழங்கிய ஒப்பனைக்கான பொருட்களுக்கான பெட்டிளில் ஆணுறைகள், கர்ப்ப தடை மருந்துகள் உள்ளிட்டவை இருந்து உள்ளன.
இதுபற்றிய வீடியோவை வெளியிட்டு சிவராஜ் சிங் தலைமையிலான பா.ஜ.க. அரசை காங்கிரஸ் கட்சி கடுமையாக சாடியுள்ளது. எனினும், இதற்கு மாநில சுகாதார துறையே பொறுப்பு என மூத்த மாவட்ட அதிகாரி பூர்சிங் ராவத் கூறியுள்ளார்.
நாங்கள் ஜோடிகளின் வங்கி கணக்கில் நேரடியாக ரூ.49 ஆயிரம் பணபரிமாற்றம் செய்தோம். ரூ.6 ஆயிரம் மதிப்பிலான உணவு, குடிநீர், கூடாரம் வழங்கினோம். ஆனால், ஆணுறைகள், கர்ப்ப தடை மருந்துகளை நாங்கள் வழங்கவில்லை.
குடும்ப கட்டுப்பாட்டுக்கான விழிப்புணர்வு திட்ட தொடக்கத்தின் ஒரு பகுதியாக அவை சுகாதார அதிகாரிகளால் வழங்கப்பட்டு இருக்க கூடும் என்று ராவத் கூறியுள்ளார்.