பாஜக மகளிரணி நிர்வாகியை பாலியல் வன்கொடுமை செய்த பாஜக மாவட்ட தலைவர்
தன்னை பாஜக மாவட்ட தலைவர் பாலியல் வன்கொடுமை செய்துவிட்டதாக ஓட்டலில் இருந்தவாறு பாஜக மகளிரணி நிர்வாகி வீடியோ வெளியிட்டார்.
மும்பை,
மராட்டிய மாநிலம் சோலாப்பூர் மாவட்ட பாஜக தலைவர் ஸ்ரீகாந்த் தேஷ்முக் தன்னை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டதாக பாஜக மகளிரணி நிர்வாகி குற்றஞ்சாட்டியுள்ளார்.
பாஜக மகளிரணியை சேர்ந்த நிர்மலா (வயது 32) தன்னை ஓட்டலுக்கு அழைத்து ஸ்ரீகாந்த் தேஷ்முக் பாலியல் வன்கொடுமை செய்துவிட்டதாக குற்றஞ்சாட்டினார். ஓட்டல் அறையில் உள்ள படுக்கையில் ஸ்ரீகாந்த் படுத்திருக்கும் நிலையில் படுக்கை அருகே நின்றவாறு நிர்மலா தனது செல்போனில் சமூகவலைதளமான பேஸ்புக் பக்கத்தில் தனக்கு நடந்த கொடுமை குறித்து 'லைவ்' ஆக வீடியோ வெளியிட்டார். இந்த சம்பவம் மராட்டிய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனை தொடர்ந்து பாஜக மாவட்டத்தலைவர் பொறுப்பில் இருந்து ஸ்ரீகாந்த் ராஜினாமா செய்தார். அதேவேளை, தன்னிடம் இருந்து பணம்பறிக்கவே அப்பெண் இவ்வாறு நாடகமாடுவதாக வீடியோ வெளியிட்ட பாஜக மகளிரணி நிர்வாகி நிர்மலா மீது ஸ்ரீகாந்த் போலீசில் புகார் அளித்தார்.
இந்நிலையில், ஸ்ரீகாந்த் மீது பாஜக மகளிரணி நிர்வாகி நிர்மலா போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் தன்னை திருமணம் செய்துகொள்வதாக கூறி ஸ்ரீகாந்த் தன்னை பல முறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக பாதிக்கப்பட்ட பெண் போலீசில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரை தொடர்ந்து பாஜக முன்னாள் மாவட்ட தலைவர் ஸ்ரீகாந்த் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.